Spotlightவிமர்சனங்கள்

அன்பிற்கினியாள் – விமர்சனம் 3/5

கீர்த்தி பாண்டியன் (அன்பிற்கினியாள்), அருண் பாண்டியனின் மகளாக வரும் இவர், ஒரு சிக்கன் ஹப் ஸ்டாலில் பணிபுரிகிறார். மேலும், இவர் நர்ஸிங் படித்து கனடா செல்ல முயற்சித்தும் வருகிறார்.

தாய் இல்லாததால் தந்தையான  அருண்பாண்டியனின் அதீத பாசத்தில் வளர்கிறார் கீர்த்தி பாண்டியன். எதுவானாலும் தந்தையிடம் சொல்லக்கூடிய அளவிற்கு மிகவும் நட்பான பாசத்தில் வளர்கிறார் கீர்த்தி. காதலை தவிர…

ஆம், நாயகனான ப்ரவின் ராஜாவை தந்தைக்கு தெரியாமல் காதலித்து வருகிறார். ஒருநாள், காதலனும் காதலியும் இரவில் இருசக்கர வாகனத்தில் வரும் போது போலீஸால் சிக்க, விஷயம் அருண் பாண்டியனிடம் தெரிவிக்கப்படுகிறது.

ப்ரவின் ராஜாவுடனான காதலை தன்னிடம் கூறவில்லை எனக்கூறி மகளிடம் கோபித்துக் கொள்கிறார் அருண்பாண்டியன்.

மனக்கவலையில் இருக்கும் கீர்த்தி, பணிபுரியும் சிக்கன் ஹப் ஸ்டாலில் மேனேஜரால் எதிர்பாராத விதமாக சிக்கன் பதப்படுத்தப்படும் குளிர்சாதன அறைக்குள் பூட்டப்பட்டுவிடுகிறார்.

இரவு நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால், கீர்த்தியை தேடி அலைகிறார் அருண்பாண்டியன். இறுதியில் கீர்த்தி கிடைத்தாரா இல்லையா..? தந்தை மகளின் பாசப்போராட்டம் ஜெயித்ததா இல்லையா,.? கீர்த்தியின் காதலை ஏற்றுக் கொண்டாரா இல்லையா..? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் பாண்டியனுக்கு இது ஒரு வித்தியாசமான முயற்சி தான். எப்போதும் சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே பெயர் போன அருண் பாண்டியன், தனது மகளுடன் பாச மழையை பொழிவதிலும் சரி, அரட்டை அடிப்பதிலும் சரி, மகள் காணாமல் போனதை அறிந்து மனம் உடைந்து போவதிலும் சரி என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகி கீர்த்தி பாண்டியனுக்கு விருதே வழங்கலாம். மிக கச்சிதமான நடிப்பை, யதார்த்தமான நடிப்பை கொடுத்து அன்பிற்கினியாள் கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார் கீர்த்தி.

அதிலும் இரண்டாம் பாதியில் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு மிக அற்புதமாக நடித்திருக்கிறார் கீர்த்தி.

காதலனாக வரும் ப்ரவீனுக்கு இது அறிமுக படம் என்றாலும், அனுபவ நடிகனை போன்று நடித்து அசத்தியிருக்கிறார்.

போலீஸ் எஸ் ஐ’ஆக வரும் ரவீந்திர விஜய், தனது கதாபாத்திரத்தை செவ்வென செய்திருக்கிறார். கண் பார்வையிலேயே வில்லத்தனத்தை கொண்டு வந்து மிரட்டுகிறார்.

மலையாள படத்தின் ரீமேக் படம் என்றாலும், தமிழில் சரியான திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கோகுல். இரண்டாம் பாதியில் அனைவரையும் சீட்டின் நுனியில் இருக்க வைத்து படபடப்பை பல மடங்கு ஏற்றியிருக்கிறார் இயக்குனர் கோகுல். படபடப்பையும், பரிதாபத்தையும் கொண்டு வர ஜாவித் ரியாஸின் இசை பெரிதும் கை கொடுத்துள்ளது. பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை என்றாலும், பின்னனி இசை பயணம்.

படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றால் அது மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு தான். ஒவ்வொரு காட்சியையும் மெனெக்கெடலோடு செய்து அதை சரியான முறையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தின் ஓட்டத்திற்கு மற்றொரு பலம் என்னவென்றால் அது கலை இயக்குனர் தான். இரண்டாம் பாதி முழுவதும் தனது கையில் எடுத்து கலையை கச்சிதமாக செய்திருக்கிறார் எஸ்.ஜெயச்சந்திரன்.

முதல் பாதியில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது போன்ற மனநிலை ஏற்படுகிறது.

அன்பிற்கினியாள் – படம் பார்ப்பவர்கள் அனைவரையும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த வைப்பாள் இந்த அன்பிற்கினியாள்!!

Facebook Comments

Related Articles

Back to top button