Spotlightவிமர்சனங்கள்

வானம் கொட்டட்டும் – விமர்சனம்2.5/5

தோ கள்ளிக்காட்டு பகுதியில் ஆரம்பிக்கிறது கதை. தன் அண்ணனை வெட்டியதற்காக இரண்டு பேரை வெட்டி கொலை செய்கிறார் சரத்குமார். இதற்காக ஆயுள் தண்டனை பெற்று சிறை செல்கிறார் சரத்குமார்.

கணவன் சிறை சென்றதால் மகன் மற்றும் மகள் என இருவரையும் வைத்துக் கொண்டு தனிமரமாக நிற்கிறார் ராதிகா சரத்குமார். இருவரையும் அழைத்துக் கொண்டு சென்னை செல்கிறார் ராதிகா. க்‌ஷ்டப்பட்டு மகன் விக்ரம் பிரபு மற்றும் மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரையும் வளர்க்கிறார்.

விக்ரம்பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கோயம்பேடு வாழைக்காய் மண்டியில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

பல வருடங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வரும் சரத்குமாரிடம் விக்ரம் பிரபுவும் ஐஸ்வர்யா ராஜேஷும் சரிவர பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

தனது அப்பாவை கொன்ற சரத்குமாரை பழி வாங்க வேண்டும் என்று ஒரு பக்கம் வில்லனாக முளைத்து நிற்கிறார் நடிகர் நந்தா.

இறுதியாக பெற்ற குழந்தைகள் தந்தை சரத்குமாரிடம் பாசத்தை காட்டினார்களா..?? நந்தாவின் பழிவாங்கும் திட்டம் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதையாக வந்து நிற்கிறது.

கச்சிதமான ஜோடிகளாக நடிக்காமல் வாழ்ந்து காட்டியுள்ளனர் சரத்குமாரும் ராதிகாவும். அதிலும், ஜெயிலில் இருந்து வரும் சரத்குமாரை பார்த்ததும் ராதிகாவின் நடிப்பு உச்சம். கொலையே செய்தாலும் அவர் எனது கணவன் என்று விட்டு கொடுக்காமல் காட்டும் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்த படத்தில் சாந்தணுவும் நடித்திருக்கிறார். ஏதோ சப்போர்ட்டிங் நடிகர் போல் ஆங்காங்கே எட்டிப் பார்த்துச் செல்கிறார். ‘இந்த மாதிரியான கதாபாத்திரத்தை எதுக்கு சார் எடுத்து நடிக்கிறீங்க சாந்தணு சார்..??’ என்று பலராலும் கேட்கப்பட்ட ஒரு கேள்வி.

குழந்தைத்தனமான நடிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அண்ணன் தங்கை பாசத்தை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள் விக்ரம் பிரபுவும் ஐஸ்வர்யா ராஜேஷும். அலட்டிக் கொள்ளாத நடிப்பில் விக்ரம்பிரபு நம்மை கவர்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் விக்ரம்பிரபுவின் ஆக்‌ஷன், மிரட்டலான ஒன்று.

பெரியப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேலுக்கு மிக பொருத்தமான கதாபாத்திரம் தான்.

மடோனா செபஸ்டின் கதாபாத்திரம் எதற்கு என்றே தெரியாமல் புலம்ப வைத்து விட்டார் இயக்குனர்.

இரட்டை வேடத்தில் நடித்திருந்த நந்தாவின் கதாபாத்திரம் லுக் ஓகே என்றாலும், வில்லத்தனத்திற்கு சுத்தமாக பொருந்தவில்லை. அதிலும் அந்த ‘விக்’ சுத்தமாக செட் ஆகவில்லை.

நந்தாவின் கதாபாத்திரத்தை பார்க்கும் போது ஆங்காங்கே சிரிப்பும் எட்டிப் பார்த்தது.

சித் ஸ்ரீராமின் இசையில் பாடல்களோ, பின்னனி இசையோ எதுவும் அவ்வளவாக எடுபடவில்லை. “ பேசாம நீங்க மத்தவங்க இசையில பாடுறதோட நிறுத்திக்கோங்க சிவாஜி” என்று தான் சொல்லத் தோன்றியது.

படத்திற்கு சற்று ஆறுதல் சூப்பரான ஒளிப்பதிவு ஒன்றுதான். ப்ரீத்தா ஜெயராமன் மிக கச்சிதமாக அதை செய்து முடித்திருக்கிறார்.

குடும்ப பாசம், பழிவாங்கும் படலம் என பழைய மசாலாவே மீண்டும் எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர். அதிகப்படியான நடிகர்கள் பட்டாளம் இருந்து அதை சரிவர பயன்படுத்தாமல் விட்டுவிட்டார் இயக்குனர்.

கதையின் ஈர்ப்பு எதுவும் இல்லாமல் போனது படத்திற்கு மிகப்பெரும் பலவீனம்

வானம் கொட்டட்டும் – உயிரோட்டமில்லா கதை…

Facebook Comments

Related Articles

Back to top button