
ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, விஜயகுமார், கெளதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு, முரளி ஷர்மா, முத்துகுமார், ஹரீஷ் பெராடி, மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், கும்கி அஸ்வின், டெல்லி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் படம் தான் இந்த “ரத்னம்”.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எம் சுகுமார். இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
கார்த்திகேயன் சந்தானம் & ஜீ ஸ்டூடியோஸ் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.
வேலூர் மாவடத்தின் ஆந்திரா எல்லையோரம் தான் படத்தின் கதைக்களம். படத்தின் ஆரம்பத்தில், எல்லையோரத்தில் மிகப்பெரும் கொள்ளை சம்பவம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண் ஒருவர் வேலூர் மாவட்ட சந்தை பகுதியில் வந்து தஞ்சம் அடைகிறார்.
அங்கு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். வருடங்கள் சில ஆன பிறகு, ஒரு சில காரணத்தால் தற்கொலை செய்து கொள்கிறார் அந்த பெண். அதன்பிறகு, மார்க்கெட் ரெளடியாக வரும் சமுத்திரக்கனியின் உயிரைக் காப்பாற்றுகிறார் அந்த சிறுவன்.
சிறுவன் ஜெயிலுக்கு சென்று, பின் வெளியே வருகிறார். சமுத்திரக்கனியின் வலது கரமாக நிற்கிறார். அந்த சிறுவனே ரத்னம் (விஷால்)
லோக்கல் ரெளடியாக வலம் வருகிறார் விஷால். இந்நிலையில், தேர்வு எழுதுவதற்காக பக்கத்து ஊரில் இருந்து வேலூர் வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.
இவரை, ஆந்திரா கும்பல் ஒன்று கொலை செய்ய துரத்துகிறது. அவர்களிடம் இருந்து ப்ரியாவை காப்பாற்றுகிறார்.
இனி ப்ரியாவிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், எத்தனை பேரை வேண்டுமானாலும் கொலை செய்வேன் என்று களத்தில் இறங்குகிறார் விஷால்.
எதற்காக விஷால் அப்படி இறங்க வேண்டும்.? காதல் அல்லாத பந்தம் ப்ரியா மீது ஏன்.? ஆந்திர வில்லன்களின் கதை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

உயரத்திற்கு ஏற்றவாறு எத்தனை பேர் வந்தாலும் துவம்சம் செய்கிறார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோவாக அதிரடி காட்டியிருக்கிறார் இப்படத்தில். அதுமட்டுமல்லாமல், எமோஷன்ஸ் காட்சிகளிலும் தனது நடிப்புத் திறனை காட்டியிருக்கிறார்.
ப்ரியா பவானி சங்கருக்கு இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு கதாபாத்திரத்திலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார்.
படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகள் தங்களுக்கானது அளவோடு செய்துமுடித்திருக்கிறார்கள்.
ஹரி படத்தில் எதை எதிர்பார்த்து திரைக்குச் செல்வோமோ, அதில் எந்த குறையும் வைக்காமல் அனுப்பி வைக்கிறார்.
திரைக்கதையின் வேகம், படத்தில் இருக்கும் லாஜிக் ஓட்டைகளை மறைக்க வைக்கிறது. இருந்தாலும், ஆங்காங்கே கதை தொங்கிக் கொள்வதால் படத்தின் மீதான ஈர்ப்பு சற்று குறைகிறது.
யோகிபாபுவின் காமெடி எந்த இடத்திலும் செட் ஆகவில்லை. கத்தி கத்தி பேசுவதை குறைத்திருக்கலாம்.
ஆக்ஷனுக்கு பஞ்சமில்லை…
பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிதாக ஜொலிக்கவில்லை.
சுகுமாரின் ஒளிப்பதிவு பளிச்.
மொத்தத்தில்,
ரத்னம் – வேகத்தில் நிதானம் இருந்திருக்கலாம்.





