Spotlightவிமர்சனங்கள்

அந்தரன் – விமர்சனம் 3.75/5

டிப்பு: பிரஜின், இவானா வருண், அதிரன், ரமேஷ், பத்மென், செந்தில் குமாரி, அனுபமா குமார், எம்.கே. சம்பசிவம், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், சஜிதா, ராஜீவ், சுந்தர், தனலட்சுமி, தண்டபாணி, சாரதி, கார்த்தி, சுமதி, கிரிதரன், மணிமேகலை, அர்ஜுன் தேவ், காட்வின் மற்றும் பலர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சந்தோஷ் ராவணன்

தயாரிப்பு: எம்.கே. சம்பசிவம்

இணை தயாரிப்பாளர்கள்: ஆர். சுந்தரமூர்த்தி, கே. குமார், எஸ். சுதாகர்

ஒளிப்பதிவு: கிஷோர் ராமச்சந்திரன்

இசை: ஹரி எஸ்.ஆர்.

கலை இயக்கம்: தண்டபாணி

படத்தொகுப்பு: இக்னேஷியஸ் அஸ்வின், சதீஷ் குரோசாவா

அழகான காதல் பாடலில் படம் ஆரம்பிக்கிறது… அழகு செல்லபுள்ள என தொடங்கும் அந்த அழகு பாடல், அது காட்சிப்படுத்தப்பட்ட விதம் என சிறிய மனமகிழ்வோடு படத்தின் கதை ஆரம்பமாகிறது.

ஒருதலை காதலாக இளைஞன் ஒருவன் நாயகி இவானா பின்னால் சுற்ற, அவரது தந்தை அந்த இளைஞனை கன்னத்தில் அறைந்ததோடு மட்டுமல்லாமல், வீட்டிற்குச் சென்று, அந்த குடும்பத்தை ஊரை விட்டே விரட்டிவிடுகிறார்.

தொடர்ந்து, சில வருடங்களுக்குப் பிறகு, கதை நகர்கிறது. நாயகி இவானா, ஒரு இளைஞரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, இருவருக்கும் விரைவில் திருமணம் அரங்கேற இருக்கிறது. ஆனால், இவானா முகத்தில் கவலை தோய்ந்து இருக்க, என்ன காரணம் என்று இளைஞர் கேட்க, என்னை திருமணம் செய்ய வந்து உங்கள் உயிருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற கவலை என்று இவானா கூற, அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்று அந்த இளைஞன் கூறி ஆசுவாசப்படுத்துகிறார்.

தொடர்ந்து, அங்கிருந்து இருவரும் பைக்கில் சென்று கொண்டிருக்க, நடுவழியில் ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தி, அந்த இளைஞர் மொபைல் போனில் பேசிக் கொண்டிருக்க, வேகமாக வந்த லாரி ஒன்று அந்த இளைஞரின் உயிரை பறித்து விடுகிறது.

இதோடு, இவானாவை திருமணம் செய்து கொள்ள வந்த இளைஞர்கள் மூன்றும் பேரும் மர்மமான முறையில் மரணித்து விடுகின்றனர். இதனால், இவானாவும் இவரது தந்தையாக வரும் சம்பசிவமும் மிகுந்த மனக்கவலையில் இருந்து வருகிறார். அமைச்சருக்கு உறவுக்கார நபர் என்பதால், இந்த வழக்கை போலீஸ் உயரதிகாரியாக வரும் பிரஜினிடம் கொடுத்து விசாரிக்க சொல்கிறார்கள்.

தனது புத்திசாலித்தனமான விசாரணையை துவக்குகிறார் பிரஜின். விசாரணையை வேகப்படுத்தும் பிரஜின், இவானா மீது காதலில் விழுகிறார். இருந்தாலும், இவானாவிற்கு இந்த காதலில் சம்மதம் இல்லை. காதல் திருமணம் வரை சென்றால், நிச்சயம் பிரஜினின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் இவானாவிற்கு இருக்கிறது.

இருந்தாலும் இருவரும் பழகி வருகின்றனர். இறுதியில், பிரஜினின் காதல் கைகூடியது.? இவானாவை திருமணம் செய்து கொள்ள வரும் இளைஞர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன.,? யார் இந்த கொலையை செய்வது.?? இவானாவிற்கு திருமணம் நடந்ததா இல்லையா.??? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.

போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பிரஜின், மிகவும் கட்டுப்பாடான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விசாரணைக் காட்சிகளில் ஒரு அதிகாரிக்கான கம்பீரத்தையும், காதல் காட்சிகளில் மென்மையையும் சமநிலையுடன் வெளிப்படுத்துகிறார். குறிப்பாக உண்மையை கண்டுபிடிக்க போராடும் காட்சிகளில் அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது. இதுவரை இப்படியொரு நடிப்பை எந்த படத்திலும் பார்த்ததில்லையே என்றுகூற வைத்துவிட்டார் பிரஜின்.

இவானா கதையின் மையமாக இருந்தாலும், வெறும் காதல் நாயகியாக இல்லாமல், தனது வாழ்க்கையை துரத்தும் மர்மத்தால் மனவேதனையில் வாழும் பெண்ணின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். பயம், குழப்பம், காதல், வேதனை என பல உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது.

எம்.கே. சம்பசிவம் ஒரு மகளின் எதிர்காலத்தை நினைத்து தவிக்கும் தந்தையாக மனதில் நிற்கிறார். அனுபமா குமார், செந்தில் குமாரி உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை அளித்துள்ளனர்.

இயக்குநர் சந்தோஷ் ராவணன், வழக்கமான பேய் கதையாகவோ அல்லது சாதாரண கொலை மர்மமாகவோ இல்லாமல், உண்மை எது என்பதை இறுதிவரை மறைத்து வைத்து, சஸ்பென்ஸை தக்கவைக்க முயற்சி செய்திருக்கிறார். குறிப்பாக முதல் பாதியில் விதைக்கப்படும் சிறிய சிறிய சம்பவங்கள், இரண்டாம் பாதியில் ஒன்றோடொன்று இணையும் விதம் ரசிக்க வைக்கிறது.

கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்தின் மர்மமான சூழலை சிறப்பாக பதிவு செய்துள்ளது. இரவு நேரக் காட்சிகள், பதற்றமான தருணங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதம் படத்தின் த்ரில்லர் உணர்வை உயர்த்துகிறது.

ஹரி எஸ்.ஆரின் இசையில் பாடல்கள் மனதை கவர்கின்றன. குறிப்பாக தொடக்கத்தில் வரும் காதல் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் சஸ்பென்ஸ் காட்சிகளுக்கு தேவையான பதற்றத்தை உருவாக்குகிறது.

கொஞ்சம் திக்குது திக்குது பாடல் தித்திப்பாக இருந்தது. முதற்கனவே புது உணர்வு பாடலும் ரசிக்கும்படியாக இருந்தது.

இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்களும், மர்மத்தின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் விதமும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. கொலைகளை யார் செய்தது என்று தெரிய வரும் வரை சீட்டின் நுனியிலேயே ரசிகர்களை கொண்டு வந்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் மிகப்பெரிய பலம், “அடுத்த காட்சியில் என்ன நடக்கும்?” என்ற எதிர்பார்ப்பை இறுதிவரை தக்க வைத்திருப்பதுதான். க்ளைமாக்ஸில் சொல்லப்படும் உண்மை, கதையை வேறு கோணத்தில் பார்க்க வைக்கிறது.

“அந்தரன்” வழக்கமான காதல் கதையோ, சாதாரண கொலை மர்மமோ அல்ல. காதல், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் உணர்வுகளை சமநிலையுடன் கலந்து, பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்க வைக்கும் ஒரு த்ரில்லர் அனுபவத்தை வழங்குகிறது.

“அந்தரன்” – மர்மம் விலகும் வரை மனதைப் பதற வைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர்.

Facebook Comments

Related Articles

Back to top button