வாழ்க்கை என்பது ஒரு கோடு.. கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தால் ஒரு வாழ்க்கையும், கோட்டிற்கு அந்த பக்கம் சென்றால் வேறு ஒரு வாழ்க்கையும் நம்மால் வாழ முடியும்.
ஆந்திரா மெஸ்சில் இருக்கும் கதாபாத்திரங்கள் எந்த பக்கம் சாய்ந்தார்கள் என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
சற்று காமெடி கலந்த வில்லனாக வருகிறார் வினோத்.
தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருவதற்கு பதிலாக ஏ பி ஸ்ரீதரிடம் ஒரு பெட்டியை திருடிவரும் பொறுப்பை ஒப்படைக்கிறான் வினோத்.
((ஏ பி ஸ்ரீதர் தனது வயதுக்கு முதிர்ந்த காதலாக இருந்தாலும் தனது காதலில் உண்மையாக இருந்தும் அவருடைய காதலை ஏற்க மறுக்கிறார் அவருடைய காதலி.
உன்னால் ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது என கூறிய காதலி, அந்த அவமானத்தால் பணம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வைக்கிறான்))
ஸ்ரீதர் தன்னுடைய கூட்டாளியான ராஜ்பரத், பாலாஜி மற்றும் மதி ஆகியோருடன் அந்த பெட்டியை திருடுகிறார். பெட்டியை திறந்து பார்த்தால் கோடிக்கணக்கில் பணம்.
அந்த பணத்தை வினோத்திடம் கொடுக்காமல், அதை தூக்கிக் கொண்டு நால்வரும் ஆந்திரா பக்கம் சென்று விடுகின்றனர்.
ஆந்திரா மாநிலத்தில் ஒரு அழகிய கிராமத்தில் ஜமீனாக வரும் அமர் மற்றும் அவரது இளம் வயது மனைவி தேஜஸ்வனியும் வாழ்ந்து வரும் வீட்டில் இவர்கள் நால்வரும் அடைக்கலம் கொள்கின்றனர்.
இந்நிலையில் தேஜஸ்வனியும் ராஜ்பரத்தும் காதல் கொள்கின்றனர். இவர்கள் நால்வரையும் தேடி ஆந்திரா வருகிறார் வில்லன் வினோத்.
வில்லன் வினோத்திடம் இருந்து அவர்கள் நால்வரும் தப்பித்தார்களா..???
ஸ்ரீதரின் லட்சியம் நிறைவடைந்ததா..??
ஜமீனுக்கு ராஜ்பரத், தேஜஸ்வனியின் காதல் தெரிந்த பின்பு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை..??
ராஜ் பரத், ஏ பி ஸ்ரீதர், மதி, பாலாஜி நால்வரும் கதைக்கு ஏற்ற பொருத்தம்தான். ராஜ் பரத்தின் ஹீரோயித்தனம் கச்சிதம். படம் முழுவதும் நடந்து கொண்டே இருப்பதும், கதை அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருப்பதும் படத்திற்கு பெரிய வீக்.
வெறும் 10 நிமிடங்களில் முடிந்து விடும் கதையை 2 மணி நேரம் எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனாலும், தன்னுடைய பாதையை மாற்றாமல் கதையின் இறுதி கட்டத்திற்கு அமைதியாக, மெதுவாக நகர்த்தியிருக்கிறார்.
மெதுவாக செல்லும் கதைதான் படத்திற்கு சற்று சறுக்கலாக அமைந்ததுள்ளது. படத்திற்கு கொஞ்சம் ஆறுதல் தருவது ஆங்காங்கே வரும் பழைய பாடல்கள் மற்றும் தேஜஸ்வினி.
தனது கண்களால் அனைவரையும் கட்டி இழுத்து வைத்துக் கொள்கிறார் தேஜஸ்வினி.
காதலில் ராஜ்பரத் தேஜஸ்வினியின் கண்களுக்கு பதில் கூற முடியாமல் திணறுகிறார்.
ஆறடி உயரத்தில் ஆழ் மனதில் ஆளைக் கொல்கிறார் தேஜஸ்வினி.
பிரசாந்த் பிள்ளையின் பின்னனி இசை படத்தோடு பயணம் புரிகிறது. முகேஷ் ஜி.யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்சியமைப்பகள் கச்சிதம்.
ஆந்திரா மெஸ் – ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இல்ல…..