தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த, பிடித்த, அரசியல்வாதிகள் பலருக்கு பிடிக்காத ஒரு பெயர்தான் “டிராபிக் ராமசாமி”.
அநீதிகள் நடக்கும் பல நடக்கும்போது, அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முதல் வழக்கு தொடுப்பவர் இந்த ‘டிராபிக் ராமசாமி’.
சாலையோரங்களில் விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்ற வைக்கப்படும் முதல் ’கை’ இந்த ”டிராபிக் ராமசாமி”யின் கையாக தான் இருக்க முடியும்.
இவரின் வாழ்க்கை (சமூக) ஓட்டத்தை மையமாக வைத்து, விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் நடிக்க எடுக்கப்பட்ட படம்தான் இந்த “டிராபிக் ராமசாமி”.
மனைவி, மகன், மகள், பேத்தி என சந்தோஷமான குடும்பத்துடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தாலும், சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டிகேட்டு, அரசியல்வாதிகள் பலரின் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொள்கிறார்.
சென்னையில் மீன்பாடி(மூன்று சக்கர) வண்டிகளால் ஏற்படும் விபத்துக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கில் எம் எல் ஏ, மேயர், மந்திரி என அனைவரும் சிக்கிக் கொள்கின்றனர்.
இவர்கள் டிராபிக் ராமசாமியை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் தாண்டி இந்த வழக்கில் டிராபிக் ராமசாமி வெற்றி கண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
டிராபிக் ராமசாமியாக எஸ் ஏ சி, கதைக்கு மிக பொருத்தமான கதாபாத்திரம். நடிப்பின் சக்கரவர்த்தியாக நிமிர்ந்து நிற்கிறார். பல இடங்களில் அவர் அடிவாங்கும் காட்சிகள் நெஞ்சை ஒருகணம் பதம் பார்த்து விடுகிறது. பேத்தியுடன் பாசக் கொஞ்சல்களிலும், மனைவி ரோகிணியுடன் காதல் புரிவதிலும், தனது முதிர்ச்சி நடிப்பை இளமையாக கொடுத்திருக்கிறார்.
ரோகிணி, வில்லனாக வந்து எட்டிபார்த்து ஹீரோவாக மாறும் ஆர் கே சுரேஷ், படத்திற்கு ஏற்ற கதாபாத்திரம்தான்.
கொஞ்சம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த கதையில் காமெடி என்று அம்பிகாவின் நடிப்பு எரிச்சலடைய வைத்து, பொறுமையையும் சோதித்துவிட்டது.
படத்தினை கொஞ்சம் கமர்சியலாக கொடுப்பதாக எண்ணி இயக்குனர் கொஞ்சம் தடுமாறிவிட்டார். அரசியல்வாதிகள் அவ்வப்போது சீரியஸாகவும், அவ்வப்போது காமெடியாக வருவது போல் காட்சி அமைத்தது ஏற்கும்படியாக இல்லை.
பால முரளி பாலுவின் பின்னனி இசை கதையோடு சேர்ந்து பயணம்.
டிராபிக் ராமசாமி – கதைக்களத்தில் கொஞ்சம் ”டிராபிக்” ஆகிடுச்சு இயக்குனரே….