
கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், ஒளிப்பதிவு – பாலு எஸ் வைத்யநாதன்
நடிகர்கள்: பாலு எஸ் வைத்யநாதன், அஞ்சனா கீர்த்தி, மேகாலி மீனாட்சி, லொல்லு சபா ஜீவா மற்றும் பலர்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: தாரகை சினிமாஸ்
கதைக்குள் பயணிக்கலாம்…
பாலு எஸ் வைத்யநாதன், மேகாலி மீனாட்சி மற்றும் லொல்லு சபா ஜீவா இவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர். இவர்கள் படித்து வரும் கல்லூரியை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முயல்கிறது.
இதனை எதிர்த்து, பாலு வைத்யநாதன் மற்றும் அவரது நண்பர்கள் கல்வித்துறை அமைச்சரிடம் முறையிடுகின்றனர். ஆனால், அதனை ஏற்க மறுக்கிறார் கல்வி அமைச்சர். இதனால், நீதிமன்றம் செல்கிறார் பாலு வைத்யநாதன்.
தொடர்ந்து தன்னோடு கல்லூரி மாணவர்கள் சிலரையும் சேர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் இறங்குகிறார் பாலு வைத்யநாதன்.
இது ஒரு பக்கம் அரங்கேற, மற்றொரு பக்கம் குடும்பத்தை விட்டு அரசியல் ஒன்றே தனது இலக்காகக் கொண்டு அதில் பயணித்து வருகிறார் அஞ்சனா கீர்த்தி.
ஆட்சி மாற்றம் மட்டும் போதாது அரசியலிலும் மாற்றம் நிகழ வேண்டும் தன்னோடு பயணிப்பவர்களை கூட்டிக் கொண்டு தமிழக அரசு தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நிகழ்த்த முயற்சி எடுத்து வருகிறார் அஞ்சனா கீர்த்தி.
இந்த இரு கதைகளிலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தலையிட்டு அரசை கவிழ்க்க நினைக்கும் அவர்களை அழிக்க நினைக்கின்றனர்.
ஆளும் கட்சியை எப்படி சமாளித்தனர்.? தனது இலட்சிய பாதையை இவர்கள் அடைந்தார்களா இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
ஆட்சி குறித்தும் அதிகாரம் குறித்தும் அரசியல் வசனங்கள் படத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கே சலிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அந்த வசனங்கள் இருப்பதால் நமக்கு போர் அடித்து விடுகிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் ரசிக்க வைத்தாலும், வைக்கப்பட்ட இடங்களை சற்று மாற்றியிருந்திருக்கலாம்.
வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக இருந்தாலும், வசனங்களின் நீளம் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டது.
அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படத்தை இயக்கிய இயக்குனரை வெகுவாகவே பாராட்டி விடலாம். அஞ்சனா கீர்த்தி தன்னுடைய வசன உச்சரிப்பை அழகாக கொடுத்து தனது கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறார்.
மேலும், பாலு எஸ் வைத்யநாதன், மேகாலி மீனாட்சி, லொல்லு சபா ஜீவா உள்ளிட்டவர்களும் தங்களது கேரக்டர்களை அளவாக செய்திருந்தாலும், படத்தின் நீளம் நம்மை சோதனைக்குள் ஆழ்த்திவிடுகிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே இயக்குனரே…