
ஜெய்தேவ் அவர்களின் இயக்கத்தில் பாவனா, ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “தி டோர்”.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் வருண் உன்னி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கெளதம். மேலும், படத்தொகுப்பு செய்திருக்கிறார் அதுல் விஜய்.
கதைப்படி,
படத்தின் ஆரம்பத்திலேயே வானத்திலிருந்து ஒரு பனித்துளி விழுந்து, பாவனாவின் தந்தை மர்மமான முறையில் இறந்து விடுகிறார். இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் ஆர்கிடெக்ட் பணியில் இருந்து விலக முடிவெடுக்கிறார் பாவனா.
நிறுவனத்தின் ஓனரான ஜெயபிரகாஷ், பாவனாவிடம் பேசி மீண்டும் பணிக்கு திரும்ப வைக்கிறார். பாதியில் நிறுத்தி வைத்துச் சென்ற வேலையை மீண்டும் துவங்க ஆரம்பிக்கிறார் பாவனா.
ஒரு தனியார் கட்டிடத்தின் ஆர்கிடெக்ட் பணியில் மும்முரமாக இருந்து வருகிறார் பாவனா. அதேசமயம், ஒரு அமானுஷ்யம் பாவனாவை தொடர்ந்து மிரட்டுவதும் பயமுறுத்துவதுமாக இருக்கிறது.
இது கனவு தான் என்று நினைத்துக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்கிறார். ஆனால், அதுகனவல்ல நிஜம் தான் என்று கூறுகிறார் ரமேஷ் ஆறுமுகம் என்பவர்.
பாவனாவை அச்சுறுத்தும் அந்த அமானுஷ்யம் யார்.?? எதற்காக பாவனாவை குறி வைக்க வேண்டும்.?? எதற்காக அவர்கள் கொல்லப்பட்டார்கள் உள்ளிட்ட கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நாயகி பாவனா. தனது கேரக்டரை மிக அழகாக செய்து முடித்திருக்கிறார். தனக்கே உரித்தான சின்ன சின்ன ரியாக்ஷன்களை ஆங்காங்கே கொடுத்து தனது கேரக்டருக்கு நன்றாகவே வலு சேர்த்திருக்கிறார் பாவனா.
அதிலும் குறிப்பாக, அமானுஷ்யத்தைக் கண்டு அதிர்ச்சியாகி நிற்கும் காட்சியாக இருக்கட்டும் தனது தந்தையை நினைத்து கலங்கி நிற்கும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். இருந்தாலும், கதாபாத்திரத்தின் வலுவை இன்னமும் ஆழப்படுத்தியிருக்கலாமே என்ற எண்ணம் எழாமல் இல்லை.
போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராம், வழக்கமான நடிப்பையே கொடுத்திருக்கிறார்.
பாவனாவின் நண்பியாக வரும் இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கின்றனர்.
ரமேஷ் ஆறுமுகத்தின் கேரக்டர் ஆரம்பத்தில் பெரிதாக காட்டப்பட்டு, பின் அப்படியே மழுங்கடிக்கப்பட்டு விட்டது சற்று ஏமாற்றமே.
ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்கள் தங்களது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
இரண்டாம் பாதியில் தேடுதலை சற்று குறைத்து த்ரில்லரை அதிகப்படுத்தியிருக்கலாம்.
ப்ளாஷ் பேக் காட்சி கண்ணீர் வரவழைத்தது. படத்தின் ஆரம்பத்தில் அநேக இடங்களில் பின்னணி இசை ஒளிப்பதிவு அமானுஷ்யம் என படம் பார்ப்பவர்களை மிரள வைத்துவிட்டது, அதன்பிறகு அதன் வேகம் குறைந்ததை ஏற்கமுடியவில்லை.
சின்ன சின்ன குறைகள் எட்டிப் பார்த்தாலும், படத்தினை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் வென்றிருக்கிறார்.
பின்னணி இசை மிரள வைத்து விட்டது.
ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரும் அளவில் கைகொடுத்திருக்கிறது.
ஹாரர் த்ரில்லர் விரும்பிகளுக்கு நிச்சயம் ஏமாற்றத்தைக் கொடுக்காது..





