Spotlightசினிமாவிமர்சனங்கள்

எறும்பு – விமர்சனம் 3.5/5

சார்லி, எம் எஸ் பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ராஜ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் சுரேஷ் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “எறும்பு”.

எறும்பு படத்தின் ட்ரெய்லரை பார்த்த போது, ஒரு மெலிதான கதை போல இருக்கும் என்று எண்ணிக் கொண்டு திரையரங்கிற்குள் சென்று பார்த்தால்,

கதைப்படி,

எளிமையான குடும்பத்தைச் சார்ந்த சார்லிக்கு இரண்டு குழந்தைகள் (மோனிகா சிவா மற்றும் சக்தி ரித்விக்). மனைவி தவறிவிட்டதால் இரண்டாவதாக சூசன் ராஜை திருமணம் செய்து கொள்கிறார். சூசனுக்கு ஒரு கைக்குழந்தை. என்னதான் இருந்தாலும், மோனிகாவும் சக்தியும் மூத்த தாரத்தின் பிள்ளைகள் தானே என்ற எண்ணம் இருக்கிறது சித்தியான சூசனுக்கு..

கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகின்றனர் சார்லியும் சூசன் ராஜும். எம் எஸ் பாஸ்கரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறார் சார்லி. எம் எஸ் பாஸ்கரின் நெருக்கடி தாளாமல், இன்னும் 20 நாளுக்குள் மொத்த பணத்தையும் தருவதாக சார்லி கூறிவிடுகிறார்.

சூசன் ராஜும் சார்லியும் கரும்பு வெட்டுவதற்காக பக்கத்து ஊருக்கு சென்று விடுகின்றனர். வருவதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகும் என்பதால், அதற்குள் பணத்தை ரெடி பண்ணி எம் எஸ் பாஸ்கருக்கு கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார் சார்லி.

இச்சமயத்தில், தனது பேரனான சக்திக்கு வீட்டில் இருந்த சித்தியின் சிறிய மோதிரத்தை அணிந்து விடுகிறார் சார்லியின் தாயார்.

அந்த மோதிரத்தை தொலைத்துவிடுகிறான் சக்தி. சித்தி வந்து கேட்டால் என்ன செய்வது என்று செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் சக்தியும் மோனிகாவும்.

தனது சித்தி வீட்டிற்கு வருவதற்குள் மோதிரத்தை கண்டுபிடித்தார்களா.? எம் எஸ் பாஸ்கரிடம் வாங்கிய கடன் தொகையை சார்லி திருப்பி கொடுத்தாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒரு அழகான அருமையான கதையை கையில் எடுத்து மெதுவாக நகர்த்திச் சென்று அதில் என்னென்ன கூற முடியுமோ அதை அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ஜி.

பிரமாண்டமான பொருட்செலவோ, பிரமாண்டமான நட்சத்திர பட்டாளமோ எதுவுமில்லாமல் ஒரு குடும்பம், ஒரு தெரு என, கேமரா செல்லும் இடமெல்லாம் பட்டு உடுத்திய பச்சை பசும்புல்லை கண்ணுக்கு குளிர்ச்சியாக காண்பித்து, அந்த மோதிரம் எப்படியாவது கிடைத்து விட வேண்டும் என்று படம் பார்ப்பவர்களின் எண்ணத்திற்கு எட்ட வைத்து ஒரு த்ரில்லிங்கை கொண்டு வந்து விட்டார் இயக்குனர்.

முதல் பாதி சற்று ஆடி அசைந்து சென்றாலும், இரண்டாம் பாதி கைதட்ட வைத்து விடுகிறது. அதிலும், அந்த முயல் துள்ளிச் செல்லும் போது ஒட்டுமொத்த க்ளைமாக்ஸையும் அதில் வைத்தது போன்ற ஒரு உணர்வை கொடுத்த இயக்குனருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.

சார்லியிடம் ஆங்காங்கே சற்று ஓவர் ஆக்டிங்க் எட்டிப்பார்த்தாலும், கதை நகர்ந்து கொண்டே இருப்பதால் பெரிதாக குறையாக சொல்ல முடியவில்லை.

சக்தி மற்றும் மோனிகா இருவரும் படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். பச்சையம்மா மற்றும் முத்து என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய இருவரும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார்கள்.

அனுபவ நடிகரான ஜார்ஜ் மரியன், சிட்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.. அதிலும், படத்தின் பிற்பாதி காட்சிகள் அனைத்திலும் கண்கலங்க வைக்கும் காட்சிகளில் கைதட்டல் பெறும் அளவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார்.

சிறுமி மோனிகா ”அம்மா… அம்மா” என்று அழும் காட்சியாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் சித்திக்கு பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் காட்சி, பரோட்டாவிற்கு கிடைக்காத ஆம்லேட் கிடைக்கும் காட்சி, சித்தி தண்ணீர் எடுத்து வைக்கும் காட்சி, என கண்கலங்க வைக்கும் காட்சிகள் ஆங்காங்கே எட்டிப் பார்க்க வைத்தது இயக்குனரின் கைவண்ணம்.

சித்தி கதாபாத்திரத்தில் சூசன் பொருத்தமாக இருந்தார். வட்டி தொழில் செய்யும் வில்லன் கதாபாத்திரமாக பொருந்தியிருந்தார் எம் எஸ் பாஸ்கர். இவரின் உடல் மொழியும் பேச்சு மொழியும் கதாபாத்திராத்திற்கு நச் என பொருந்தியிருந்தது.

இசை அருண் ராஜ்

படத்தின் பின்னணி இசை க்ளைமாக்ஸ் காட்சிக்கு கனக்கச்சிதமாக பொருந்தியிருந்தது படத்திற்கு கூடுதல் பலம்.

ஒளிப்பதிவு இயக்குனர் : கே எஸ் காளிதாஸ்

எடுத்துச் சென்ற கதைக்களம் அருமை. படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறது ஒளிப்பதிவு.

எறும்பு – எதிர்பார்ப்பின்றி சென்று கைதட்டல் கொடுக்க வைத்த படைப்பு…

Facebook Comments

Related Articles

Back to top button