
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நேற்று, இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில், 100 பேர், உடல் சிதறி பலியாகினர்;ஏராளமானோர் காயம்அடைந்தனர்.
அண்டை நாடான பாகிஸ்தானில், வரும், 25ல், பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலை சீர்குலைக்க, தலிபான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்திருந்தது.
இந்நிலையில், கைபர் மாகாணத்தில் உள்ள பானு பகுதியில், முடாஹிடா மஜ்லிஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம், நேற்று நடந்தது; அப்போது, குண்டு வெடித்ததில், ஐந்து பேர் இறந்தனர்.இந்த குண்டு வெடிப்பு நடந்த, அடுத்த சில மணி நேரத்தில், பலுசிஸ்தான் மாகாணம், மஸ்டங் பகுதியில், சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
பலுசிஸ்தான் அவாமி கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பில், அந்த கட்சியின் தலைவர் சிராஜ் ரைசனி உட்பட, 95 பேர் இறந்தனர்; 100க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.