
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் படம் தான் “பீஸ்ட்”. இப்படத்திற்கு நெல்சன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகிபாபு, உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
கதைப்படி,
நாயகன் தளபதி விஜய், இந்திய உளவாளியாக பணியாற்றி வருகிறார். ரா பிரிவில் தீவிரவாதிகளை அழிக்கும் பிரிவில் பணிபுரிகிறார். தீவிரவாத கும்பலின் தலைவன் ஒருவனை பிடிக்கும் முயற்சியில் குழந்தை ஒன்று இறந்துவிடுகிறது. அந்த குழந்தை இறந்ததற்கு தான்தான் காரணம் எனக் கூறி தனது பணியை உதறிவிடுகிறார். மனதளவில் பாதித்த விஜய் மனநல மருத்துவர் ஒருவருடைய ஆலோசனை புரிகிறார்.
இந்நிலையில், திருமண நிகழ்வில் நாயகி பூஜா ஹெக்டேவை சந்திக்கிறார். சந்தித்த 5 நிமிடத்தில் காதல் தொற்றிக் கொள்ள, நாயகி பணிபுரியும் செக்யூரிட்டி ஏஜென்சி நிறுவனத்தில் விஜய்யையும் வேலைக்கு சேர்த்துவிடுகிறார் நாயகி பூஜா. விஜய், பூஜா மற்றும் ஏஜென்சி ஓனராக வரும் விடிவி கணேஷ் மூவரும் தனியார் வணிக வளாகத்திற்கு (Shopping Mall) செல்கின்றனர்.
அச்சமயத்தில், 30 பேர் கொண்ட தீவிரவாத கும்பலால் மால் ஹைஜேக் செய்யப்படுகிறது. வளாகத்திற்குள் சிக்கிய பொதுமக்கள் 200 பேரையும் தீவிரவாத கும்பலிடம் இருந்து விஜய் எப்படி காப்பாற்றினார்.? தீவிரவாதிகளின் நிபந்தனைகளை அரசு நிறைவேற்றியதா .? என்பதே படத்தின் மீதிக் கதை.
தளபதி விஜய், படத்தின் ஆகப்பெரும் பலம் இவர் மட்டுமே. இந்த வயதிலும் என்ன ஒரு எனர்ஜி. நடனத்தில் அனைவரையும் அசரடித்திருக்கிறார். ஆக்ஷன், காதல் என அனைத்து காட்சிகளிலும் மிளிர்கிறார். படத்தின் ஆரம்ப காட்சியில் தீவிரவாத கும்பலை அசால்டாக அட்டாக் செய்யும் காட்சி, க்ளைமாக்ஸ் காட்சி என இரு காட்சிகளிலும் விஜய்யின் எனர்ஜி வேற லெவல்.
ஹலமதி பாடலில் தனி ஒரு ஆளாக நடனத்தில் வியக்க வைத்திருக்கிறார். மற்றபடி பூஜா ஹெக்டே அழகு தேவதையாக வந்து செல்கிறார். அவருக்கு ஸ்கோர் செய்ய ஒரு சில இடங்களும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் சரியாகவும் செய்து முடித்திருக்கிறார். விடிவி கணேஷ் அவர்களின் டைமிங்க் காமெடி படத்திற்கு பூஸ்ட் தான்.

மற்றபடி, நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த டாக்டர் படத்தில் வந்த காமெடி கதாபாத்திரங்களான யோகிபாபு, கிங்க்ஸ்லி, சுனில் ரெட்டி உள்ளிட்டோரின் காமெடி படத்தில் சுத்தமாக எடுபடவில்லை. மத்திய போலீஸ் உயரதிகாரியாக வரும் செல்வராகவன், தமிழ் சினிமாவிற்கு நடிகனாக புதியவர் என்றாலும், தனக்கான கதாபாத்திரத்தை “இட்ஸ் ஓகே” என்று செய்து முடித்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் சற்றும் நன்றாகவே செதுக்கியிருக்கலாம். அனிருத்தின் இசையில் மூன்று பாடல்களும் ஹிட் அடித்திருக்கிறது. பின்னணி இசை மிரட்டலாக கொடுத்திருக்கிறார். மனோஜ் அவர்களின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். ஆக்ஷன் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது.
இவ்ளோ நல்லா இருந்தும் என்ன பண்றது. படத்துல கதை இல்லையே ராசா என்று தான் கேட்க தோன்றுகிறது. அர்ஜுன், விஜயகாந்த் காலத்தில் எடுக்கப்பட்ட ஹைஜேக் கதையை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார் நெல்சன்.
நாகர்ஜுனா நடித்த பயணம் படத்தில் முக்கால்வாசி, யோகிபாபு நடித்த கூர்கா படத்தில் கால்வாசி இது போதும் பீஸ்ட் எடுக்க என்று சன் பிக்சர்ஸ் மாறனிடம் இயக்குனர் நெல்சன் கூறியிருந்திருப்பார் போல.
ஆகப்பெரும் கலைஞனை கையில் வைத்திருந்த இயக்குனர் நெல்சன், அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும். சில இடங்களில் அல்ல பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் எட்டிப் பார்த்த வண்ணம் தான் இருந்தது.
இன்னும் எத்தனை காலத்திற்கு தான் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துக் கொண்டே இருக்கப் போகிறதோ இந்த தமிழ் சினிமா.? செல்வராகவன் தனது உதவியாளரிடம் ”சாமிக்கு மாலை போட்டிருக்கிறாயா.?” என்று கேட்டு மறுகணமே நக்கல் அடிப்பதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை.?
கோலமாவு கோகிலா, டாக்டர் என்ற இரு வெற்றிப் படங்களை இயக்கிய நெல்சனுக்கு என்ன தான் ஆச்சு,.? என்று தான் கேட்க தோன்றுகிறது.
rating – 2.75/5
பீஸ்ட் – இன்னும் பெஸ்ட்’ஆ செய்திருக்கலாம்…