
நடிகர்கள்: நபி நந்தி, சரத், சுவாசிகா, பூனம் கவூர், வேலா ராமமூர்த்தி, மொட்ட ராஜேந்திரன், சங்கிலி முருகன்,
இயக்கம்: விஜயசேகரன்
தயாரிப்பு: Vi CINEMA GLOBAL NETWORKS & LIKE
ப்ளாஷ் பேக் கதையை மூலமாக வைத்து படத்தின் கதை நகர்கிறது. மலைகிராமத்தைச் சேர்ந்த நபி நந்திக்கு சுவாசிகா சகோதரியாக வருகிறார். தாய் தந்தை இல்லாததால் தனது தங்கையை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார்.
சுவாசிகா படித்து மாநிலத்தில் முதல் மாணவியாக வருகிறார். தனது கிராமத்திற்கு மருத்துவ வசதி இல்லாததால், மருத்துவராக ஆக வேண்டும் என்பது தான் தன்னுடைய லட்சியமாக கொண்டிருக்கிறார்.
மருத்துவம் படிக்க சென்னை வருகிறார். அண்ணனை விட்டு பிரிந்து இருக்க முடியாது என்பதால், அண்ணனும் தங்கை சுவாசிகாவுடன் சென்னை வந்து விடுகிறார்.
சென்னையில், தங்கியிருந்து மருத்துவம் படிக்கிறார் சுவாசிகா. வருடங்கள் செல்ல, தான் படிக்கும் கல்லூரியின் மருத்துவமனையில் குற்றம் நடந்து கொண்டிருக்க, அதற்கு எதிராக பொங்குகிறார் சுவாசிகா.
இந்த சம்பவத்தால் சுவாசிகா மற்றும் அவரது அண்ணன் நபி நந்தி இருவரின் வாழ்க்கையையும் புரட்டி போட்டு விடுகிறது.
அப்படி என்ன சம்பவம் என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் நபி நந்தி தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்து பாராட்டு பெறுகிறார். தனது தங்கை மீது வைத்திருந்த பாசத்தை வெளிக்காட்டுவதில் நன்றாகவே தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மலை கிராமத்தில் இருக்கும் போது ஒரு லுக்கும், சென்னைக்கு வந்த பிறகு ஒரு லுக்கும் என தனது தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் நபி நந்தி.
படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருந்தனர்.
பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் என்பது வெளிச்சமாக தெரிகிறது. நன்கு அறிந்த எம் எஸ் பாஸ்கர் மற்றும் லப்பர் பந்து சுவாசிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் லுக் நன்றாகவே காட்டிக் கொடுத்து விடுகிறது.
பல படங்களில் பார்த்த ஒரு கதையை தான் மீண்டும் பார்த்த ஒரு உணர்வை கொடுத்து விட்டார் இயக்குனர். கதை மற்றும் திரைக்கதையில் நல்லதொரு மாற்றம் செய்து உணர்வை கடத்தியிருந்தால் படம் அனைவருக்குமானதாக இருந்திருக்கக்கூடும்.
இருந்தாலும் நட்சத்திரங்களின் உழைப்பு மற்றும் இயக்குனரின் உழைப்பு உள்ளிட்டவற்றிற்காக படத்தினை ஒருமுறை விசிட் அடித்துவிட்டு வரலாம்.
ஒளிப்பதிவு ப்ளாஷ் பேக் காட்சியில் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். இசை ஓகே ரகமாக கடந்து செல்ல வேண்டியிருந்தது. க்ளைமாக்ஸ் காட்சி ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. வேலா ராமமூர்த்தி இப்படத்தில் பெரிதான காட்சிகள் கொடுக்கப்படவில்லை.





