Spotlightவிமர்சனங்கள்

‘ரீ ‘ – விமர்சனம் 2.75/5

ஸ்ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரமா, சங்கீதா பால், திவ்யா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ரீ ‘.

இப்படத்தை சுந்தரவடிவேல் எழுதி இயக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவு தினேஷ் ஸ்ரீநிவாஸ், இசை ஹரிஜி,பின்னணி இசை ஸ்பர்ஜன் பால்,படத் தொகுப்பு கே. சீனிவாஸ்.

சிறுவயதில் தான் சந்தித்த ஒரு சம்பவத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான ஒரு பெண்ணின் மனநிலையையும், ஒரு சிறுமியின் இறப்புக்குத் தான் தான் காரணம் என்கிற குற்ற உணர்ச்சியால் அழுத்தப்பட்ட இன்னொரு பாத்திரத்தின் மனப்பிறழ்வையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதை.

ரீமா என்கிற பிரதான பாத்திரத்தின் முதல் எழுத்தாக ‘ ரீ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் உளவியல் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் மனோதத்துவ டாக்டர் முகில். அவரது மனைவி ரீனா.
இளம் தம்பதிகளான இருவரும் புதிதாக ஒரு வீடு வாங்கி,குடி போகிறார்கள்.
பக்கத்து வீட்டில் ஏதோ பெண்ணின் அலறல் ஒலி கேட்பதாகக் பாக்டர் கணவரிடம் தினமும் புகார் சொல்லிக் கொண்டே இருக்கிறாள் ரீனா. அது ஒரு மாயையாக இருக்கலாம். அது வீண் கற்பனையே தவிர நிஜமல்ல என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார் டாக்டர்.மனைவியோ அதை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறாள்; கணவர் நம்பாதவராக இருக்கிறார்.இருவரும் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் மனைவி முறையீட்டுக்குச் செவி கொடுக்கிற டாக்டர் முகில், களத்தில் இறங்கி ஆய்வு செய்கிறார்.

பக்கத்து வீட்டில் பிரச்சினை இருப்பது தெரிகிறது.அங்கு குடி இருக்கும் இன்னொரு டாக்டர் சாகுல் வீட்டில் இருந்துதான் அலறல் ஒலி கேட்கிறது. மெல்ல அந்த வீட்டிற்குள் நுழைந்து விசாரிக்கிறார் முகில்.அங்கே அந்த அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சாகுல் பெரும் மனப்பிறழ்வுக்கு ஆளாகியிருப்பது தெரிகிறது.அவரிடம் நெருங்க நெருங்க அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. தான் செய்த அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்த தன் மகளை வீட்டுக்குள் பிணமாகப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து முகிலுக்கு அதிர்ச்சி.குற்ற உணர்ச்சிக்கு ஆளான மனம், ஜான்சன் என்கிற இன்னொரு பாத்திரமாக உருவெடுத்து அவரைக் கொடுமைப்படுத்துவதாகக் கண்டுபிடிக்கிறார்.அவருக்குள் மறைந்திருந்த அந்தப் பழிவாங்கும் பாத்திரத்தை, சிகிச்சை மூலம் வெளிக்கொண்டு வந்து சாகுலை எப்படி முகில் மீட்கிறார் என்பதுதான் கதை.

இப்படத்தில் மனோதத்துவ நிபுணராக பிரசாந்த் சீனிவாசன் நடித்துள்ளார். பெரும்பாலும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்.நடிப்பில் இன்னும் சில படிகள் ஏற வேண்டும்.அவரது மனைவியாக காயத்ரி ரமா நடித்திருக்கிறார்.வழக்கம் போல பயந்து அலறும் முக பாவனைகள் காட்டியுள்ளார்.
டாக்டர் சாகுலாக பிரசாத் வருகிறார். பார்க்க சாதுவாக இருப்பதும் இறந்து போன தன் மகளின் நினைவு வந்ததும் மனப்பிறழ்வு காட்டும் மனநோயாளியாக மாறுவதும் என நடிப்புக்கு நல்ல வாய்ப்பு.டாக்டர் சாகுலிடம் இருந்து குற்ற உணர்ச்சியாக வெளிப்படும் ஜான்சன் பாத்திரத்தில் இயக்குநர் சுந்தரவடிவேல் நடித்துள்ளார்.தண்டனை தண்டனை என்று வீராவேசத்துடன் கூறிக்கொண்டு பழிவாங்கத் துடிக்கிற அந்த பாத்திரத்தில் அசல் மனநோயாளியாகவே தெரிகிறார்.அடையாளம் காண முடியாத தோற்றமும் நடிப்பும் வெளிப்படுத்தி உள்ளார். இயக்குநர் சுந்தரவடிவேல் நடிகராகப் பளிச்சிட வாய்ப்புள்ளது.

படத்தின் முதல் பாதி வழக்கம் போல பாடல்கள், ரொமான்ஸ் என்று நகர்கிறது. அழுத்தமான காட்சிகள் இல்லாமல், உப்பு சப்பில்லாமல் போகிறதே என்று அலுப்பூட்டுகிறது. ஆனால் இரண்டாம் பாதி அதற்கு நேர் மாறாகச் செல்கிறது. படத்தில் இரண்டாவது பாதியில் திடீர் திருப்பங்கள் வருகின்றன.பேய் படமா சைக்கோ படமா என்பதற்குப் பதில் கிடைக்கிறது.யாருக்கு என்ன பிரச்சினை என்று யூகிக்க முடியாத அளவிற்கு சஸ்பென்ஸ் நிலவுகிறது. அந்த வகையில் இயக்குநரைப் பாராட்டலாம்.

பாடல்களுக்கு இசை இசையமைப்பாளர் தினாவின் தம்பி ஹரிஜி. பாடல்களில் பழைய நெடி அடிக்கிறது.தனியே ஒலிக்கிற அளவிற்கு படத்தில் பாடல்கள் பொருந்தவில்லை. எனவே பாடல்கள் படத்திற்குப் பெரிதாக உதவவில்லை, என்றாலும் பின்னணி இசை பெரிய பலமாகப் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.நேர்த்தியான ஒலிகளால் நல்லதொரு பின்னணி இசை வழங்கியுள்ளார் ஸ்பர்ஜன் பால்.

இரண்டே இரண்டு வீடுகளை வைத்துக் கொண்டு பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே நடக்கும் காட்சிகளாக அமைத்துள்ளார் இயக்குநர். அந்தக் குறை தெரியாமல் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சீனிவாஸ்.

அந்தக் காட்சி அமைப்புகளுக்காகவும் முதல் படமே இப்படி ஒரு உளவியல் பிரச்சினையை எடுத்துக் கொண்டதற்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம்.
டெலுஷனல் டிஸ்ஆர்டர் (Delusional Disorder)எனப்படும் பிரச்சினை பற்றி இந்தப் படத்தில் கூறி இருக்கிறார்.

ஆனால் இதே கதையை வைத்துக் கொண்டு நட்சத்திர நடிகர்கள் நடித்து இருந்தால் படம் எங்கேயோ சென்று இருக்கும்.பேசப்படக்கூடிய சைக்கோ திரில்லர் ஆக மாறி இருக்கும். சிக்கனமான செலவில் படத்தை எடுத்திருப்பது காட்சிகளில் புரிகிறது.பட்ஜெட்டின் போதாமையால் படம் சாதாரணமாகத் தெரிகிறது.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பக்கத்து வீட்டில் ஒலிக்கும் ஒலிகளின் காரணத்தை நாம் சற்று யோசிக்கத் தொடங்கி விடுகிற அளவுக்கு நமக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுகிறது படம்.

நம் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் சொல்லாமல் சொல்கிறது படம்.

Facebook Comments

Related Articles

Back to top button
Close
Close