
நாயகன் தீரஜ் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்து விட்டு நல்ல வேலையில் இருக்கும் வாலிபன். இவருக்கு, நாயகி துஷாராவோடு நிச்சயதார்த்தம் நடக்கிறது.
ஓரிரு நாளில் திருமண நிகழ்வு இருக்கும் நிலையில், நண்பர்களோடு சேர்ந்து பேச்சிலர் பார்ட்டி கொண்டாடுகிறார் தீரஜ். அதில், ஒரு நண்பர் போதைப் பொருள் ஒன்றை தீரஜ்ஜிடம் காண்பிக்கிறார். அதை எதிர்பாராதவிதமாக தீரஜ் உபயோகப்படுத்தி விடுகிறார்.
தன்னை மிஞ்சிய போதை அவரது தலைக்கு ஏறிவிடுகிறது., தான் செய்வது என்னவென்று தெரியாமலே ஒவ்வொன்றையும் செய்கிறார். அந்த ஒருநாள் அவர் செய்த அந்த தவறால் என்ன என்ன விளைவுகள் அவருக்கு நிகழ்ந்தன என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் தீரஜ், கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கச்சிதமாக கொடுத்திருக்கிறார். ஒரு அறிமுக நடிகர் என்ற சாயல் எந்த இடத்திலும் தெரியாமல், கதைக்கு என்ன தேவையோ அந்த ஒரு நடிப்பை மிகத் தெளிவாக நடித்து, கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு வரவு நாயகன் தீரஜ். சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம் தீரஜ்ஜை.
ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் நடிகை துஷாரா. அழகும், கட்டி இழுக்கும் கண்களும் இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் அடிப்பார்.
மேலும், படத்தில் நடித்த ராதாரவி, பிரதாயினி, மீரா மிதுன், சார்லி, அஜய், மைம் கோபி, அர்ஜுன் என அனைவரிடம் கதைக்கு தேவையான நடிப்பை மட்டும் வாங்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சந்துரு.
படத்தின் முதல் பாதி அட போங்கப்பா என்று சலிப்பை தட்டினாலும், இரண்டாம் பாதி சற்று சூடுபிடித்து வேகமெடுக்கிறது.
கடைசி சில நிமிடங்கள் மட்டுமே அதன் போதை பழக்கத்தின் பாதிப்பை கூறிவிட்டு மற்ற காட்சிகள் முழுவதும் போதை.. போதை… போதை…. என்று கொண்டு சென்றதால், கொஞ்சம் ஓவர் ’டோஸ்’ ஆகிவிட்டதோ என்ற ஒரு ஃபீல்…
படத்தின் மிகப்பெரிய பலமே படத்தின் ஒளிப்பதிவுதான். மிகக் கச்சிதமான ஒளிப்பதிவை கொடுத்து படம் பார்ப்பவர்களை படத்திற்குள் ஈர்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்.
படத்தின் பாடல்கள் கேட்கும் ரகம் ..அதிலும்’ வெர்ஜின் ஸ்டோனர்… ’ என்ற பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னனி இசை மிரட்டலை கொடுத்திருக்கிறது. இசையமைப்பாளர் கேபி-க்கு வாழ்த்துகள்.
ஒரு சில குறைகள் சற்று எட்டிப்பார்த்தாலும், தற்போதைய தமிழ்நாட்டிற்கு தேவையான ஒரு செய்தியாக தான் இப்படத்தை பார்க்க முடிகிறது.. போதைப்பழக்கத்திற்கு அடிமையானல் இப்படி ஒரு நிகழ்வு நம் வாழ்விலும் நடக்கலாம் என்ற அச்சத்தை இப்படம் நிச்சயம் கொடுக்கும்…
போதை ஏறி புத்தி மாறி – சற்று அதிகமான போதையாகிடுச்சி..