
கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகளை அடிக்கடி வெளியில் தூக்கி வீசும் அவலம் இன்னமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இம்மருத்துவமனையில் இல்லாததால், இதன் வளாகத்தில் தெருநாய்களும், பூனை, எலி முதலியவையும் சுதந்திரமாக வலம்வரும்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டில் சிகிச்சைபெற்றுவந்த பெண் நோயாளி ஒருவர், நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார். அவர் பெயர், ஊர் போன்ற தகவல்கள் இல்லாததால், அந்தப் பெண்ணின் உடலை பிணவறைக்குக் கொண்டு செல்லாமல், வார்டிலேயே மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வைத்துள்ளனர்.
இதனிடையே, மருத்துவமனையில் சுற்றித் திரிந்த பூனை ஒன்று, தரையில் அலட்சியமாக வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் உடலைக் கடித்தபடி இருந்துள்ளது. இதை அந்த வார்டில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் பார்த்து மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவர்கள் உடனடியாக உடலை பிணவறைக்குக் கொண்டுசெல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து, நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்தவுடன், அவசர அவசரமாக பெண்ணின் உடலை பிணவறைக்குக் கொண்டு சென்றனர்.
மேலும், இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சிகளை செல்போனில் பதிவுசெய்த நோயாளிகளின் உறவினர்கள், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்தக் காட்சி, பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.




