
சென்னை: திருச்சி மும்கொம்பிலிருந்து கடலூர் நோக்கி காவிரி மீட்பு பேரணியை ஸ்டாலின் இன்று துவங்குகிறார். கடலூரில் 13ம் தேதி பேரணி நிறைவடைந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக அதன் தோழமைக் கட்சிகளோடு தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திருச்சி முக்கொம்பில் இன்று தொடங்குகிறார்.
வரும் 9ஆம் தேதி மற்றொரு குழு அரியலூரில் இருந்து பயணத்தை தொடங்குகிறது. இரு பிரிவாக நடைபெறும் பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நடப்போம், குரல்கொடுப்போம், மீட்டெடுப்போம் என்ற முழக்கத்தோடு இந்த பயணம் நடைபெறுகிறது. பயணத்தின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அஞ்சலட்டையில் கையெழுத்துபெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடை பயணம் தொடங்க உள்ளதை அடுத்து திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ‘காவிரி உரிமை மீட்புப் பயணம்’ குறித்த விவரங்களை அவர் எடுத்துக் கூறினார்.