
இயக்கம்: அனிஷ் அஷ்ராப்
நடிகர்கள்: வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, கிங்க்ஸ்லி,
இசை: ஏ ஜே ஆர்
ஒளிப்பதிவு: அரவிந்த்
படத்தொகுப்பு: விஷால்
தயாரிப்பு: மகேஸ்வரன் தேவதாஸ், சின்ன தம்பி ப்ரொடக்ஷன்
கதைப்படி,
பிரபல எழுத்தாளரின் மகனாக வருகிறார் வெற்றி. தந்தையின் இழப்பிற்குப் பிறகு அவரது வாழ்க்கையை புத்தகமாக எழுத பிரபல பத்திரிகையாளராக வரும் ஷில்பா மஞ்சுநாத்திற்கு உதவி செய்கிறார் வெற்றி.
அதற்காக சென்னை வருகிறார் வெற்றி. அங்கு, இன்ஸ்பெக்டரான தம்பி ராமையாவின் நட்பு கிடைக்கிறது. ஒரு கொலை குற்றத்தை செய்தவர் யார் என்று கண்டுபிடிக்க தம்பி ராமையாவிற்கு உதவியாக இருக்கிறார் வெற்றி.
அடுத்தடுத்து உதவி செய்ய, தம்பிராமையா வெற்றியை தன்னுடனே வைத்துக் கொள்கிறார். இந்நிலையில், சென்னையில் அடுத்தடுத்து சில இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் கொடூரமாக முகம் சிதைக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்.
இந்த கொலை ஒரு சைக்கோ கில்லரால் நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார் வெற்றி. அந்த சைக்கோ கில்லரை வெற்றி & டீம் கண்டுபிடித்ததா இல்லையா.? அவர் ஏன் இந்த கொலைகளை செய்கிறார் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை வைத்திருக்கிறார்கள் இரண்டாம் பாதியில்.
எந்த விதமான உழைப்பும் இல்லாமல், ஜஸ்ட் வந்து தனது வழக்கமான நடிப்பையே இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் நாயகன் வெற்றி. அவ்வப்போது நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த வெற்றி, சமீப காலமாக தனது கதை தேர்வில் கோட்டை விட்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்., மீண்டும் யூனிக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி வெற்றி தருவார் என்று நம்பி இருப்போம்.
தனது நடிப்பாலும் கண்களாலும் ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத். சீரியஸான கதையில் காமெடி என்ற பெயரில் காட்சிகளை நசுக்கியிருக்கிறார் தம்பி ராமையா. காமெடிக்கும் மாறுவதும் திடீரென சீரியஸாக மாறுவதுமாக இருப்பது காட்சிகளுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
ஒரு க்ளைமாக்ஸ் கொடுத்த பிறகு இரண்டாவதாக ஒரு க்ளைமாக்ஸ் எடுத்து வந்தது படத்திற்கு எந்த அளவிற்கும் கைகொடுக்கவில்லை.
பல படங்களில் வந்த இசையை இசையமைப்பாளர் இப்படத்தில் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் நோட் பண்ண மாட்டீங்களா இயக்குனர்.?
ஒளிப்பதிவு சற்று கைகொடுத்திருக்கிறது.
வில்லனாக நடித்தவரின் முகத்தில் எந்த விதமான நடிப்பும் எட்டிப் பார்க்காதது பெரும் வருத்தம் தான். ஓபனாக ஒரு சிறுமியை தொடுவது என்ன மாதிரியான மனநிலை அந்த வில்லனுக்கு.? சைக்கோவாக காட்ட வேண்டும் என்றால் அதற்கு பல வழி இருக்கிறதே.??
படம் முடியும் போது, அடுத்த பாகத்திற்கும் அடி போட்டிருக்கிறார்கள்…
முதல் பக்கம் – இதுவே கடைசி பக்கமாகவே இருக்கட்டும்…





