
யோகிபாபு நடிப்பில் நேரடியாக ஓடிடி’யில் வெளியாகியிருக்கும் படம் தான் ‘காக்டெய்ல்’.
யோகிபாபு, கவின், மிதுன் மற்றும் பாலா இவர்கள் நால்வரும் நண்பர்கள். மிதுன் தனது வீட்டிற்கு நண்பர்களை அழைத்து பார்ட்டி கொடுக்கிறார். நால்வரும் இரவு குடித்துவிட்டு மட்டையாகிவிடுகிறார்கள்.
காலை எழுந்து பார்க்கும் போது ஒரு பெண் பிணமாக தனது வீட்டிற்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியாகின்றனர். யார் இந்த பெண், எப்படி இறந்தாள் என ஒன்றும் புரியாமல் அனைவரும் மிரள்கின்றனர். அந்த பெண்ணின் சடலத்தை புதைப்பதற்கு இவர்கள் முயல்கின்றனர்.
அதேசமயம், பல கோடி மதிப்புள்ள பழங்கால முருகன் சிலை ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் போலீஸ் ஆய்வாளரும் மிதுனின் வருங்கால மாமனாருமான ஷாயாஜி ஷிண்டே.
இறுதியாக, முருகன் சிலை கிடைத்ததா..? இறந்த பெண் யார்..?? எப்படி இறந்தார்..??? என்பது படத்தின் மீதிக் கதையாக வைத்திருக்கிறார் இயக்குனர் விஜயமுருகன்.
பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மகிழ்வித்து வந்த யோகிபாபு, ஒரு சில படங்களில் நாயகனாகவும் தோன்ற துவங்கியுள்ளார். இதுவரை இவர் நாயகனாக தோன்றிய ஒரு படமும் கூட வெற்றி பெறவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.
இந்த படத்திலாவது, ஏதாவது காமெடி என்ற ஒன்றை பார்த்து ரசிக்கலாம் என்று பார்த்தால், படம் முழுக்க ஒரு இடத்தில் கூட சிரிக்கும்படியாகவோ, ரசிக்கும்படியாகவோ ஒரு காட்சி கூட இல்லை என்பது தான் உண்மை.
மிதுன் கதைக்கு ஏற்ற சரியான கதாபாத்திரம் தான், அமைதியான தோற்றம், அளவெடுத்து நடித்திருக்கிறார். கவின் நடிப்பு செயற்கையாகவே தென்பட்டது. ஒரு இடத்திலும் ரசிக்கும்படியாக இல்லை.
கலக்கப்போவது யாரு புகழ் பாலாவின் காமெடி ஒரு சில இடங்களில் மட்டுமே ரசிக்கும்படியாக இருந்தது. ’சீக்கிரம் பேசி படத்தை முடிச்சி விடுங்கப்பா ’ என்ற மனநிலைக்கு கொண்டு வந்துவிட்டுவிட்டார் இயக்குனர்.
பல படங்களில் பார்த்த கதையை ஒரு கதையாக தயார் செய்து ‘காக்டெய்ல்’ தயார் செய்திருக்கிறார் இயக்குனர். மைம் கோபி, கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி, புகழ், என மற்றவர்களும் கதைக்குள் வந்து செல்கின்றனர்.
சாய் பாஸ்கரின் இசையில் பின்னனி இசை ஓகே ரகம் தான். முதல் படம் என்றால் தனக்கான தனித்திறமையை காட்ட இயக்குனர்கள் பலர் முயல்வார்கள். அப்படியாக இந்த படத்தில் இயக்குனர் விஜயமுருகன் எந்தவொரு முயற்சி எடுத்ததாக தெரியவில்லை.
காக்டெய்ல் – ’பச்ச தண்ணிய ஊத்தி வச்சிருக்காங்க முருகேசா..’ சுத்தமா போதையே இல்ல…



