Spotlightவிமர்சனங்கள்

கோமாளி; விமர்சனம் 3.25/5

மிழ் சினிமாவில் தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லமை படைத்தவர் நடிகர் ‘ஜெயம் ரவி’. அப்படியாக வித்தியாசமான கதையம்சத்தில் அவர் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் தான் ‘கோமாளி’.

கதைப்படி,

1990 களில் ஆரம்பிக்கும் கதையில், பள்ளி மாணவராக வருகிறார் ஜெயம் ரவி. தனது பள்ளியில் உடன் படிக்கும் சம்யுக்தாவை காதலிக்கிறார். தனது காதலை ஒருநாள் அவரிடம் சொல்ல செல்கிறார் ஜெயம் ரவி.

அந்நேரத்தில், அந்த ஏரியாவில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வரும் பொன்னம்பலத்தை தீர்த்து கட்ட நினைத்து ப்ளான் போடுகிறார் மற்றொரு ரவுடியான கே எஸ் ரவிக்குமார். ஒரு பக்கம் ஜெயம் ரவி சம்யுக்தாவிடம் காதலை கூற, மறுபக்கம் பொன்னம்பலத்தை தீர்த்து கட்டுகிறார் கே எஸ் ரவிக்குமார்.

மக்கள் அங்கே கூட்டம் சேர, கே எஸ் ரவிக்குமார் அங்கிருந்து தப்பிக்க ஜெயம் ரவி தன் கையில் வைத்திருந்த ஒரு சின்ன சிலையை பிடுங்கிக் கொண்டு, சம்யுக்தாவை கொலை செய்து விடுவேன் விலகிச் செல்லுங்கள் என்று மிரட்ட, கையோடு அந்த சிலையை கொண்டு சென்று விடுகிறார் கே எஸ் ரவிக்குமார்.

அதே நேரத்தில் சம்யுக்தாவை காப்பாற்ற செல்லும் ஜெயம் ரவி, விபத்தில் சிக்கி கோமாவிற்கு சென்று விடுகிறார்.

ஜெயம் ரவியின் பள்ளி நண்பன் யோகி பாபு, ஜெயம் ரவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டு ஜெயம் ரவியை கவனித்து வருகிறார்.

சுமார் 16 ஆண்டுகள் கோமாவில் இருந்து, மீண்டெழுகிறார் ஜெயம் ரவி. 1990 களின் மனநிலையிலே சுற்றி வரும் ஜெயம் ரவி, அனைத்து விஷயத்தையும் புதிதாக பார்க்கிறார். (செல்போன், டிவி, கட்டிடங்கள் என அனைத்தையும்).

வீட்டில் பணக் கஷ்டம் வாட்டி வதைக்க, ஜெயம் ரவிக்கும் தகுந்த வேலை கிடைக்காமல் இருக்க, அந்நேரத்தில் பல வருடங்களுக்கு முன் கே எஸ் ரவிக்குமார் தன்னிடம் இருந்து பறித்துச் சென்ற அந்த சிறிய சிலை பல கோடி மதிப்புடையது என அறிகிறார் ஜெயம் ரவி.

மிகப்பெரும் அரசியல்வாதியாக வளர்ந்து நிற்கும் கே எஸ் ரவிக்குமாரிடம் இருந்து அந்த சிலையை கைப்பற்றினாரா இல்லையா என்பது படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக ஜெயம் ரவி, கதைக்கேற்ற கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். பள்ளி காலத்தில் ஒரு பள்ளி மாணவனாக தனது உடல் எடையை குறைத்து கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நடனம், காமெடி, குணச்சித்திரம், என அனைத்திலும் வழக்கம்போல் தனது அதிரடியை காட்டியிருக்கிறார்.

யோகிபாபு வரும் காட்சிகள் அனைத்தும் திரையரங்குகளில் சிரிப்பலைகள் சத்தம் விண்ணை முட்டுகிறது. ஒரு சில படங்களில் வறட்சி காமெடிகளை கொடுத்து வந்த யோகி பாபு இப்படத்தில் சற்று முன்னேறியிருக்கிறார்.

காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே படத்தில் அழகு தேவதைகளாக வந்து செல்கிறார்கள்.

கே எஸ் ரவிக்குமார் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் வினோதினி கண்கலங்க வைக்கிறார்.

காட்சிகள் அனைத்திலும் தனது கேமரா வழியாக பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார் ரிச்சர்ட் எம் நாதன்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பைசா நோட்டு, ஒளியும் ஒலியும் பாடல்கள் ரிப்பீட் மோட்.. பின்னனி இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

காமெடி, கதையின் மையக்கரு இரண்டிற்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன், அதன் ஓட்டத்திற்கு இன்னும் சற்று கூடுதலாக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

மனிதத்துவத்தை மறந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களுக்கு சரியான படமாக இருக்கும் இந்த ‘கோமாளி’. ஆண்ட்ராய்ட் போன்களில் சிக்கி சீரழிந்து வரும் ஒரு சிலருக்கு இப்படம் ஏதாவது ஒரு சிறு வலியையோ, உறுத்தலையோ ஏற்படுத்தலாம்.

வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையில் நாம் சற்று அக்கறை காட்டுவோம்.. மனிதத்துவத்தை போற்றுவோம்.

கோமாளி – யார் ’கோமாளி’..??? குடும்பத்தோடு திரையரங்கிற்கு சென்று கட்டாயம் பாருங்கள்…,

Facebook Comments

Related Articles

Back to top button