
அருள்நிதி நடிப்பில் யூ ட்யூப் பிரபலம் எருமசாணி விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் டி ப்ளாக். எப்போதுமே தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான அருள்நிதி,டி பிளாக்கை எப்படி கையாண்டிருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
கதைப்படி,
நடு வனப்பகுதியில் இருக்கும் கரு பழனியப்பனின் பொறியியல் கல்லூரிக்கு முதலாம் ஆண்டு மாணவனாக வருகிறார் அருள்நிதி. இவரது நண்பர்கள் தான் இயக்குனர் விஜய், ஆதித்யா கதிர்.
கல்லூரி மாணவி அவந்திகா மிஷ்ராவை கண்டதும் காதல் கொள்கிறார். போக போக ஒருதலைக் காதல் இரு தலைக் காதலாக மாறுகிறது. இச்சூழலில், கல்லூரியில் படிக்கும் பெண்கள் அவ்வப்போது புலி அடித்து இறந்துவிடுகிறார்கள்.
இறந்து போன பெண்களை தாக்கியது புலி அல்ல, ஒரு ஆசாமி தான் என அருள்நிதி கண்டறிகிறார்.
யார் அந்த ஆசாமி.? எதற்காக இந்த கொலைகளை செய்கிறான்.? ஆசாமி அகப்பட்டானா ?? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் நாயகனான அருள்நிதி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறிதுகூட குறைவில்லாமல் நடித்து கொடுத்திருக்கிறார். கதையில் எப்போதுமே கவனம் செலுத்தும் அருள்நிதி, இப்படத்தின் கதை தேர்வில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். கல்லூரியில் மர்ம மரணங்கள், சைக்கோ கொலைகாரன் என பல படங்களில் எட்டிப் பார்த்த கதையையே இதில் வைத்து சற்று சோர்வடைய வைத்திருக்கிறார்கள்.
நாயகியான அவந்திகா மிஷ்ரா பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், நடிப்பில் பெரிதான ஈர்ப்பைக் கொடுக்க தவறிவிட்டார். இன்னும் சற்று கூடுதல் பயிற்சி வேண்டும் அவந்திகா. இயக்குனராகவும் இருந்து கொண்டு நாயகனுக்கு நண்பனாகவும் இப்படத்தில் தோன்றியிருக்கிறார் விஜய். கேரக்டரை சிறப்புற செய்திருக்கிறார். ஆங்காங்கே பல கவுண்டர்களை சிதற விட்டு காமெடிக்கு பலம் சேர்த்திருக்கிறார் ஆதித்யா கதிர்.
திரைக்கதையை வேகமாக நகர்த்தி சென்றிருப்பதால் நமக்கு பெரிதான சலிப்பை இப்படம் கொடுக்கவில்லை.. கதை நகர்வு வசனம் என அனைத்தையும் பக்காவாக கொடுத்த இயக்குனர் விஜய், கதையிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் டி ப்ளாக் இன்னும் பெரிதாக ஈர்ப்பைக் கொடுத்திருக்கக் கூடும்.
கரு பழனியப்பனுக்கு அவ்ளோ பெரிதான எண்ட்ரீ எதற்காக.? படத்தில் இந்த கேரக்டர் தேவையே இல்லாத ஒன்று தான்.
சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் நடித்த கேரக்டர் படத்திற்கு சற்று பலம். கெளசிக் கிரிஷின் பின்னணி இசை ஆங்காங்கே மிரட்டலை கொடுத்திருக்கிறது.
எது என்னவாக இருந்தாலும் சைக்கோ த்ரில்லர் கதை விரும்பிகளுக்கு ஏற்ற ஒரு விருந்து தான்
D Block – சைக்கோ படையல் ..