ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் “சூப்பர் டூப்பர்” . இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இது ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது.
இப்படத்தை இயக்கும் ஏகே அதாவது அருண் கார்த்திக் குறும்படவுலகில் முத்திரை பதித்தவர். இவரது ‘லேகா’ பரவலான கவனம் பெற்ற படமாகும் .
படத்தின் நாயகனாக துருவா நடிக்கிறார். இவர் ‘ஆண்மை தவறேல் ‘படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக இந்துஜா நடிக்கிறார் . இவர் ஏற்கெனவே ‘மேயாத மான் ‘, ‘மெர்க்குரி’ , ‘பூமராங்’ , ‘அறுபது வயது மாநிறம்’ படங்களின் நாயகி .
படம் பற்றி இயக்குநர் அருண் கார்த்திக் பேசும் போது , ” இந்தப் படம் எல்லாரும் ரசிக்கும் படி இருக்கும். இது வழக்கமான கதை கொண்ட படமல்ல என்பதைப் புரிந்துதான் நாயகன் , நாயகி இருவருமே நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இதில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் ஆதித்யா முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகிறார். ஒரு ரகளையான கதாபாத்திரத்தில் ஷாரா நடிக்கிறார் .இவர் ‘மீசையை முறுக்கு’ , ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ , படங்களில் நடித்தவர் . அது மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் பிரபலமானவர். இப்படி சமூக ஊடகங்களில் புகழ் பெற்ற பலரும் இதில் நடிக்கிறார்கள் ” என்கிறார்.
படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர் சுந்தர்ராம் கிருஷ்ணன் , இசையமைப்பவர் திவாகரா தியாகராஜன் . படத்தொகுப்பு வேல் முருகன், கலை இயக்கம் சூர்யா.
இன்று தொடங்கி படப்பிடிப்பை 45 நாட்களில் முடிக்கும் திட்டத்தோடு மும்முரமாக இருக்கிறது “சூப்பர் டூப்பர்” படக் குழு.