
நாயகன் ஹரீஷ் கல்யாண், சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்து அம்மா ரேணுகா மற்றும் மாமா முனீஸ்காந்த் வளர்ப்பில் வளர்ந்து வருகிறார். இயற்கை மரணமாக இருந்தாலும் அப்பாவின் இழப்பிற்கு காரணம், தோஷம், ராசி இதுதான் காரணம் என நினைக்கிறார் ஹரீஷ் கல்யாண்.
அதிலிருந்து தான் எது செய்தாலும் ராசி பார்த்து நேரம் பார்த்து தான் எதையும் முடிவு செய்வார்.
தனுசு ராசியை சேர்ந்தவரான ஹரீஷ், தனக்கு வரப்போகும் பெண் கன்னி ராசி சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று ஜோசியக்காரர்கள் கூறியதை அடுத்து, கன்னி ராசி பெண்ணை தேடி அலைகிறார்.
இறுதியாக தனது முன்னாள் காதலி ரெபா மோனிகா ஜானுக்கு திருமணம் நடைபெற, அங்கு மணப்பெண்ணின் தோழியான டிகாங்கனா சூர்யவன்ஷிகாவை காண்கிறார். அவர் மீது ஹரீஷுக்கு காதல் வருகிறது.
ஆனால், நாயகியோ ஹரீஷை பிடித்திருந்தாலும், தனது வாழ்நாள் கனவான கிரகத்திற்கு ஆராய்ச்சி செல்லும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்றெண்ணி, அவரின் காதலை ஹரீஷிடம் சொல்லாமல் ஒழித்து வருகிறார்.
இறுதியாக இவர்களின் காதல் கைகூடியதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
வழக்கம் போல நாயகன் ஹரிஷ் கல்யாண் பிளே பாயாக படம் முழுவதும் இளமை ததும்பும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதல், செண்டிமெண்ட், காமெடி என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். ஆனாலும், அனைத்து படத்திலும் பார்த்து பார்த்து அலுத்து போன மேனரிசமே இருப்பதால் கொஞ்சம் சலிப்பை தட்டவைத்து விடுகிறார்.
நாயகி டிகங்கனா அழகு பதுமையாக இருக்கிறார், காதல், கவர்ச்சி என இரண்டிலும் ஆட்டம் போடுகிறார்.
யோகிபாபு அவ்வப்போது வந்து எட்டி பார்த்து செல்கிறார். காமெடி என்ற பெயரில் அவர் வரும் காட்சிகள் கடுப்பேற்றுகின்றன.
சாப்பட்டு பிரியராக வரும் முனீஸ்காந்த், ஹரீஷ் கல்யாணின் தாய்மாமனாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
நல்ல ஒரு மூலக்கதையை எடுத்த இயக்குனர் சஞ்சய் பாரதி, சற்று திரைக்கதையிலும் தனது கவனத்தை செலுத்தியிருக்கலாம். சொல்ல வேண்டிய விதத்தில் கதையை சொல்லியிருந்தால் நிச்சயம் கைதட்டல்கள் வாங்கியிருப்பார் இயக்குனர்.
ஜிப்ரான் பாடல்கள் நடனம் போட வைக்கின்றன. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு கலர்புல்.
தனுசு ராசி நேயர்களே – ஜாதகம் பார்த்துவிட்டு படம் பார்க்கச் செல்லுங்கள்





