சீனியர் இயக்குனரான ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தில்ராஜா”.
மனோ நாராயணா ஒளிப்பதிவு செய்ய அம்ரீஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது.
நாயகனாக வரும் விஜய் சத்யா, தனது மனைவி ஷெரின் மற்றும் குழந்தையுடன் இரவு நேரத்தில் காரில் வந்து கொண்டிருக்கின்றனர்.
அப்போது, அமைச்சராக இருக்கும் ஏ வெங்கடேஷ் அவர்களின் மகனும் அவரது நண்பர்களும் குடித்துவிட்டு, காரில் செல்லும் ஷெரினை தூக்க நினைக்கின்றனர்.
கார் சேசிங் செய்து அவர்களை துரத்துகின்றனர். ஒருகட்டத்தில் விஜய் சத்யாவிற்கும் அவர்களுக்கும் சண்டை நடக்க, சண்டையில் அமைச்சரின் மகனை விஜய் சத்யா விபத்தாக கொன்று விடுகிறார்.
அதன்பிறகு போலீஸ் விசாரணை நடக்கிறது. விசாரணையில் விஜய் சத்யா தான் தனது மகனை கொன்றது என்று அமைச்சருக்கு தெரியவர, அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக விஜய் சத்யா, ரஜினி என்ற கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக பொருந்தியிருக்கிறார். அக்கதாபாத்திரத்திற்கு மெனக்கெடல் செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார் விஜய் சத்யா.
நாயகி ஷெரினும் தனது பங்கிற்கான பணியை அழகாக செய்து முடித்திருக்கிறார். வில்லனாக ஏ வெங்கடேஷ் மிரட்டலான லுக்கில் தோன்றி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.
ரஜினி ரசிகர்களை வைத்து இரண்டாம் பாதியில் வரும் காட்சியை தூக்கியிருந்திருக்கலாம். அதனால், கதையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கதைக்கு சம்மந்தம் இல்லாத காட்சிகள் பல இருந்ததால், படத்தின் சுவாரஸ்யத்தை வெகுவாகவே குறைத்துவிட்டது.
காமெடி என்ற பெயரில் கே பி ஒய் பாலா நம்மை சோதனைக்குள் தள்ளிவிடுகிறார்.
அம்ரீஷின் இசையில் பின்னணி இசை அதிக சத்தம் தான். பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.
தில்ராஜா – வேகம் குறைவு