விமர்சனங்கள்

ஹிட்லர் – விமர்சனம் 3/5

வானம் கொட்டட்டும் என்ற படத்தின் இயக்குனர் தனாவின் அடுத்த படைப்பாக உருவாகியிருக்கும் படம் தான் இந்த “ஹிட்லர்”.

இப்படத்தில், விஜய் ஆண்டனி, ரியா சுமன், கெளதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்க்ஸ்லி, விவேக் பிரசன்னா, தமிழ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய விவேக் – மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். ராஜா மற்றும் சஞ்சய்குமார்
இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

கதைக்குள் பயணித்து விடலாம்…

தனது தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக கோடிக் கணக்கில் பணத்தை அனுப்பி வைக்கிறார் சிட்டிங் அமைச்சர் சரண் ராஜ். ஆனால், பணம் கொண்டு செல்லும் நபர்களை கொன்று விட்டு சிலர் பணத்தைக் கொள்ளையடித்து விடுகின்றனர்.

இந்த சம்பவம் அடுத்தடுத்த நாட்களில் நடக்கிறது. என்ன செய்வது என்றறியாமல் நிற்கிறார் சரண்ராஜ். கொள்ளையடிப்பவர்களை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியான கெளதம் வாசுதேவ் மேனன் வருகிறார்.

வழக்கை கையில் எடுத்து விசாரணையை ஆரம்பிக்கிறார். இது ஒருபுறம் நடக்க, வங்கியில் பணிபுரிபவராக வருகிறார் விஜய் ஆண்டனி.

நாயகி ரியாவை கண்டதும் காதல் கொள்கிறார். ஒரு தலை காதலாக சில நாட்கள் நகர்ந்து இரு தலை காதலாக மாறுகிறது. ஒருகட்டத்தில், இந்த கொலை, கொள்ளையை செய்வது விஜய் ஆண்டனி தான் என்று கண்டுபிடிக்கிறார் கெளதம்.

விஜய் ஆண்டனி ஏன் இதை செய்ய வேண்டும் என்பதே படத்தின் மீதிக் கதை.

வழக்கமான நடிப்பை இப்படத்திலும் கொடுத்து ஹிட்லராகவே ஜொலித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ஒரு சில இடங்களில் இன்னமும் ஓவர் ஆக்டிங்கை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

பார்ப்பதற்கு அழகாகவும் தேவதையாகவும் காட்சி தந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் நாயகி ரியா.

வில்லத்தனத்தில் தனி முத்திரையாக இருக்கிறார் நடிகர் சரண் ராஜ். ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு சீனியர் என்பதை காட்டிக் கொண்டு இருக்கிறார். சரண்ராஜ் படத்திற்கு பலம்..

மேலும், ரெடின் கிங்க்ஸ்லி, விவேக் பிரசன்னா, தமிழ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரியாக கெளதம் வாசுதேவ் மேனன் தனது மேனரிசத்தை அழகாக பயன்படுத்தியிருக்கிறார்.

பல படங்களில் பார்த்த கதை தான் என்றாலும், இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையை கையாண்டிருக்கலாம்.

மக்களுக்காக பாடுபடும் நாயகன், அரசியல்வாதிகளின் ஊழல் என பல உண்மை சம்பவங்களை வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பலம் தான்.

ஹிட்லர் – ஹிட்

Facebook Comments

Related Articles

Back to top button