அறிமுக இயக்குனர் ஜெயபால் ஜெ இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் ரித்விகாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தீபாவளி போனஸ்”.
இப்படத்திற்கு மரியா ஜெரால்டு இசையமைத்திருக்கிறார். கெளதம் சேதுராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி ப்ரொடக்ஷன் சார்பில் தீபக் குமார் டாலா இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு அழகியா கிராமத்தில் தனது மனைவி மற்றும் மகனோடு வாழ்ந்து வருகிறார் விக்ராந்த்.
கொரியர் நிறுவனத்தில் டெலிவரி வேலை செய்து வருகிறார் விக்ராந்த். பணக்கார வீடு ஒன்றில் வீட்டு வேலை செய்து வருகிறார் ரித்விகா. ஏழ்மையில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் இருவரும்.
இன்னும் இரு தினங்களில் தீபாவளி வருவதால், அப்பா தனக்கு புது துணி எடுத்துத் தருவார் என காத்துக் கொண்டிருக்கிறான் விக்ராந்தின் மகன்.
மகனின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார் விக்ராந்த். அலுவலகத்தில் தீபாவளி போனஸ் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
போனஸ் கொடுத்தால் மட்டுமே தன்னால் தீபாவளி கொண்டாட முடியும் என்ற நிலையில் இருக்கிறார் விக்ராந்த்.
இறுதியில் போனஸ் வந்ததா.?? தனது மனைவி மகனுடன் தீபாவளியை மகிழ்ச்சியோடு விக்ராந்த் கொண்டாடினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் விக்ராந்த், கதையின் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது ஏழ்மை நிலையை காட்டும் ஒவ்வொரு இடத்திலும் நம்மை கண்கலங்க வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
மனைவி மற்றும் மகனுக்காக அமைதியாக கடந்து செல்லும் இடங்களிலெல்லாம் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். விக்ராந்திற்கு இணையாக ரித்விகாவும் தனது பங்கிற்கு நன்றாகவே காட்சிகளில் ஜொலித்திருக்கிறார்.
தனது கணவனுக்கு ஹெல்மேட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றெண்ணி அதை மாட்டிக் கொண்டு அழகு பார்க்கும் காட்சியில் ஸ்கோர் செய்திருக்கிறார் ரித்விகா.
படத்தின் ஆரம்பம் முதலே ஏழ்மையை காட்டுகிறேன் என்று கூறி தொடர்ந்து அதை பதிய வைக்கவே அவ்வளவு காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர். ஏழ்மையை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு பதிய வைக்க வேண்டிய தேவை இல்லை என்று தோன்றியது.
ஏழ்மையில் இருப்பவர்களுக்கு தீபாவளியை கொண்டாடுவது என்பது அவ்வளது எளிதான விஷயம் இல்லை என்பதை இப்படத்தின் மூலம் உணர வைத்திருக்கிறார் இயக்குனர்.
இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில்,
தீபாவளி போனஸ் – வலி நிறைந்த தீபாவளி