Spotlightவிமர்சனங்கள்

டி என் ஏ – விமர்சனம் 3/5

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா விஜயன், சேத்தன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், ரித்விகா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் டி என் ஏ.

இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள் சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சஹி சிவா, ப்ரவீன். பின்னணி இசை அமைத்திருக்கிறார் ஜிப்ரான்.

ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன்.

படத்தினை தயாரித்திருக்கிறது ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம்.

கதைக்குள் பயணிக்கலாம்…

காதல் தோல்வியில் மூழ்கியிருக்கும் அதர்வா, குடி, போதை என தன் வாழ்க்கையை அழித்துக் கொண்டு ஒரு வேண்டா வெறுப்பாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

போதைப்பழக்கத்தில் இருந்து வெளியேற, அதர்வாவின் தந்தையான சேத்தன், அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார். இது ஒருபுறம் நடக்க,

Border line personality Disorder (mental health condition characterized by unstable moods, intense relationships, and impulsive behaviors) என்ற ஒரு விதமான குறைபாடு இருக்கும் நாயகியாக வருகிறார் நிமிஷா விஜயன்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த அதர்வாவை, நிமிஷா விஜயனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார் சேத்தன். இவர்களின் குடும்ப வாழ்க்கையானது மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. பிரசவிக்கிறார் நிமிஷா. அழகான ஆண்குழந்தை பிறக்கிறது இவர்களுக்கு.

குழந்தை பிறந்ததும் இதுதான் உங்கள் குழந்தை என்று நிமிஷாவிடம் காண்பிக்கிறார் மருத்துவர். அதன்பின், சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தையை கையில் ஏந்தும் நிமிஷா, இது என்னுடைய குழந்தை இல்லை என்று மருத்துவமனையில் கத்தி கூச்சலிடுகிறார் நிமிஷா.

BPD இருப்பதால், இப்படித்தான் கத்துவார்கள் என்று மருத்துவர்கள் கூறி விட, குடும்பத்தில் இருப்பவர்களும் அதனை நம்புகின்றனர். ஆனால், அதர்வாவிற்கு எழுந்தது சந்தேகம்.

மருத்துவமனையில் கொடுத்த குழந்தையோடு அங்கிருந்து வீட்டிற்கு வந்துவிடுகிறார் நிமிஷா.

வீட்டில் இருக்கும் குழந்தைக்கு டி என் ஏ பரிசோதிக்கிறார் அதர்வா. முடிவில், அந்த குழந்தை இவர்களுக்கு பிறந்ததில்லை என்று உறுதியும் செய்கிறார் அதர்வா.,.

தொடர்ந்து, குழந்தையை அதர்வா கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நீண்ட படங்களுக்குப் பிறகு அதர்வாவிற்கு ஒரு வெற்றிப்படம் ஒன்று கிடைத்திருக்கிறது என்பதில் ஒரு மகிழ்ச்சி. இருந்தாலும், படத்தின் ஆரம்ப காட்சியில் இதற்கு முன் வரிசையாக பார்த்த குடிகார கதாபாத்திரம் வந்து செல்வதால், கதையின் கதாபாத்திரத்திற்கு நுழைய சிறிது சிரமம் ஏற்பட்டது.

நிமிஷாவுடனான திருமணத்திற்குப் பிறகு வரும் கதாபாத்திரத்தில், நன்றாகவே தனது உழைப்பினைக் கொடுத்திருக்கிறார் அதர்வா. குழந்தையை கண்டுபிடிக்க அவர் படும் இன்னல்கள், ஒரு உண்மையான தந்தையின் வலியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டார் அதர்வா. க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனை கொன்று விடு என்று எழுந்து கத்தும் அளவிற்கான ஒரு எமோஷ்னலை நம்முள்ளும் கடத்திச் சென்று விட்டார் அதர்வா.

ஆரம்பத்தில் நிமிஷாவின் கதாபாத்திரத்தை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், காட்சிகள் நகர நகர அவரது BPD கதாபாத்திரத்தை தனது நடிப்பால் ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டார்.

யார் படத்தின் வில்லன் என்று காட்டாமலே கதை நகர்ந்து, படம் பார்ப்பவர்களுக்கு ஒரு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள். வில்லனும் சரியான தேர்வு தான்.

பாலாஜி சக்திவேலின் கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். சர்வ சாதாரணமாக தனது கதாபாத்திரத்தை நடித்து முடித்து இருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

இரண்டாம் பாதியில் கொடுத்த முக்கியத்துவத்தை முதல் பாதியிலும் கொடுத்திருக்கலாம் இயக்குனர். மொத்த கதையின் ஓட்டத்தையும் இரண்டாம் பாதியில் வைத்திருப்பதால் முதல் பாதியின் ஓட்டத்தை சரிவர நம்மால் ரசிக்க முடியவில்லை…

கிளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்க வைக்கும் ஒரு காட்சியை வைத்து நம்மையும் சேர்ந்து கலங்க வைத்து விட்டார் இயக்குனர்…

ஒரு ஒரு தாயின் பதட்டம் பரிதவிப்பு ஏக்கம் என அனைத்தையும் கொண்டு வந்து மையத்தில் நிலை நிறுத்திவிட்டார் இயக்குனர்…

முதல் பாதியை மட்டும் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு ரசிகர்கள் ஓடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.. ஆனால், இரண்டாம் பாதியை கண்டு கைதட்டாமலும் இருக்க முடியாது என்ற மனப்பான்மை கொண்டு வந்திருக்கிறது இந்த டி என் ஏ…

பாடல்கள் எதுவும் படத்தில் வொர்க் அவுட் ஆகாதது பெரும் ஏமாற்றம் தான்… அதிலும், காயத்ரியின் நடனம்… தவிர்த்திருந்திருக்கலாமே…

பின்னனி இசை கைகொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவு காட்சிகளை அழகூற கொடுத்திருக்கிறது.

டி என் ஏ – தாயின் வலி…

Facebook Comments

Related Articles

Back to top button