Spotlightவிமர்சனங்கள்

டிராகன் – விமர்சனம் 3.25/5

யக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கையடு லோகர், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், இந்துமதி, தேனப்பன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ”டிராகன்”.

இப்படத்திற்கு நிகேட் பொம்மி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் படத்தினை தயாரித்து இருக்கிறது.

கதைக்குள் பயணிக்கலாம்,

பள்ளியில் நன்றாக படித்து கோல்ட் மெடல் வாங்கிய மாணவன் தான் பிரதீப் ரங்கநாதன். 12ஆம் வகுப்பு முடிந்ததும் தான் காதலித்த பெண்ணிடம் தனது காதலை சொல்கிறார். அந்தப் பெண்ணோ, உன்னைப் போன்ற ஒருவனை நான் காதலிக்க மாட்டேன் என்றும் ரவுடித்தனமாக சுற்றித் திரியும் ஒருவனை தான் தான் விரும்புவேன் என்றும் கூறி விடுகிறார்..

இதனால் உடைந்து போன பிரதீப் இனி கல்லூரியில் ரவுடித்தனமாக தான் சுற்ற வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கிக் கொண்டு கல்லூரிக்குள் சேர்கிறார். கல்லூரியில் படிக்கும் அனுபமா பரமேஸ்வரனை காதலிக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

கல்லூரி முடித்து வெளியே வரும்போது பிரதீப்பிற்கு அனைத்து பாடங்களுமே அரியராக இருக்கிறது. தான் கல்லூரி படிப்பை நன்றாக முடித்து, ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக தனது பெற்றோர்களிடம் பொய் சொல்கிறார் பிரதீப்.

நண்பர்களோடு அரட்டை அடிப்பது, குடிப்பது, புகைப்பிடிப்பது என தனது வாழ்க்கையை இப்படியாக நாளுக்கு நாள் கடந்து செல்கிறார் பிரதீப். இந்நிலையில், தான் வேறு ஒருவரை திருமணம் செய்ய விருப்பதாக அனுபமா பரமேஸ்வரன் பிரதீப்பிடம் சொல்ல, பிரதீப் உடைந்து போகிறார்.

வாழ்க்கையில் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலியாக படிப்பு சான்றிதழை தயார் செய்து, மோசடி செய்து ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் பிரதீப். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி தனது வாழ்க்கையின் தரத்தை உயர்த்துகிறார்.

புதிய வீடு, புதிய கார் என வாழ்க்கையின் தரத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கிறார். இந்த சூழலில் மிகப்பெரும் கோடீஸ்வரரான கே எஸ் ரவிக்குமாரின் மகளாக வரும் கைடு லோகரை பிரதீப் ரங்கநாதனோடு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

இந்நிலையில் கல்லூரியின் முதல்வரான மிஷ்கின் பிரதிபரங்கநாதனை எதேச்சையாக சந்திக்க அவர் மோசடி செய்து தான் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் என்று மிஷினுக்கு தெரிய வருகிறது. பிரதீப் ரங்கநாதன் மிஷ்கினிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாமல் வைத்துச் சென்ற 48 அரியரையும் மூன்று மாதத்தில் படித்து கிளியர் செய்யாவிட்டால் மோசடி செய்த செயலை தான் நிச்சயமாக அனைவரிடமும் கூறி விடுவேன் என்றும் மிரட்டுகிறார் மிஷ்கின்.

வேறு வழியின்றி மீண்டும் கல்லூரிக்கு செல்கிறார் பிரதீப் அதன்பிறகு என்ன நடந்தது என்பதை படத்தின் மீதி கதை.

நாயகன் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த பிரதீப், இப்படத்திலும் அதையே செய்திருக்கிறார். ராகவன் என்ற கதாபாத்திரமாகவே பிரதீப் வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அப்படியான மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது. ஜாலி, எமோஷன்ஸ், காதல், ஆக்‌ஷன் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்து காட்சிகள் ஒவ்வொன்றிற்கும் உயிர் கொடுத்திருக்கிறார். அனுபமா மற்றும் கையடு இருவரும் படத்திற்கு மிகப்பெரும் பில்லர்களாக வருகிறார்கள்.

வழக்கமான படங்களில் இருப்பது போல் வந்து செல்லும் காட்சிகளாக கொடுக்காமல் இருவருக்குமே பல இடங்களில் நன்றாகவே காட்சிகளை வைத்து எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

இருவரையுமே தேவதைகளாக படத்தில் காண்பித்திருக்கிறார் இயக்குனர். இதுவரை நடித்த படங்களிலேயே இப்படத்தில் தான் அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மிஷ்கின் என்று சொல்லும் அளவிற்கு மிகவும் பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

கே எஸ் ரவிக்குமார், கெளதம் வாசுதேவ் மேனன் இருவருமே தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து கொடுத்து கதாபாத்திரமாக வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.

யூ-டியூப் தளத்தில் இருந்து பெரிய திரைக்கு கால் வைத்த விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் இருவருமே படத்தில் மிகப்பெரும் பங்காற்றிருக்கின்றனர். இருவருக்குமே நல்லதொரு கேரக்டர்களை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.

மேலும், படத்தில் நடித்த மரியம் ஜார்ஜ் மற்றும் இந்துமதி இருவருமே தாங்கள் ஒரு சீனியர் என்பதை வெளிப்படுத்தியிருந்தனர். இந்துமதி டப்பிங் அவரே கொடுத்திருந்திருக்கலாம்.

படத்தின் ஆரம்பத்தில் என்னடா படம் இது என்று எண்ணம் எழும் நேரத்தில் படத்தின் போக்கையே மாற்றி எண்ணங்களை தவிடு பொடியாக்கிவிட்டார் இயக்குனர்.

இரண்டாம் பாதியில் எந்த இடத்திலும் திரைக்கதை தொங்கி விடாமல் மிகவும் கச்சிதமாக அதை கொண்டு சென்று படத்தினை ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர்.

அதிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் அனைவரது கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார் இயக்குனர். நேர்மையாக படித்து நேர்மையாக இருந்தால் வாழ்வில் உச்சம் பெறலாம் என்ற எண்ணத்தை படம் பார்ப்பவர்களின் மனதில் அழுத்தமாக பதிய வைத்துவிட்டார்.

லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகமாக இருந்தது. பின்னணி இசை கதையோடு பயணம் புரிய கைகொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்.

மொத்தத்தில்,

டிராகன் – பாக்ஸ் ஆபீஸ் கிங்..

Facebook Comments

Related Articles

Back to top button