Spotlightசினிமா

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியின் ‘வானே வானே’ முதல் பாடல் வெளியீடு… காதலைக் கொண்டாடும் இனிய மெலோடி!

பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான், அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41-வது திரைப்படமான ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். SLV Cinemas நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி வருகிறது. இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த காதல் திரைப்படம், காதல், நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சியான உணர்வுகளை இணைக்கும் புத்துணர்ச்சியான படைப்பாக உருவாகியுள்ளது. ஏற்கனவே வெளியாகியிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படப்பிடிப்பு காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் முதல் பாடலான ‘வானே வானே’ வெளியாகி இசைப் பயணத்தை தொடங்கியுள்ளது.

ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கும் கதாநாயகன், நடைமேடையில் நுழையும் கதாநாயகியை முதன்முறையாகக் கண்டு காதலில் விழும் தருணத்துடன் பாடல் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து இருவரும் பகிர்ந்து கொள்ளும் இனிய தருணங்கள், பயணங்கள் மற்றும் காதல் மலரும் காட்சிகள் மனதை வருடும் வகையில் திரையில் விரிகின்றன.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், மீண்டும் ஒருமுறை மென்மையான மற்றும் மனதை மயக்கும் மெல்லிசையை வழங்கியுள்ளார். முதல் முறையாகக் கேட்டவுடன் மனதில் பதியும் இந்த பாடல், இனிமையான இசைக்கோர்ப்பாலும், இசைக்கருவிகளின் நேர்த்தியான பயன்பாட்டாலும் ரசிகர்களை கவர்கிறது.

கே.ஆர். தரன் எழுதிய பாடல் வரிகள், காதலில் ஆழ்ந்திருக்கும் இளைஞனின் மனநிலையையும், கதாநாயகியின் அழகையும், நளினத்தையும் கவித்துவமாக பதிவு செய்கின்றன. பின்னணி பாடகர் நகுல் அபயங்கர், தனது உணர்வுப்பூர்வமான குரலால் பாடலுக்கு மேலும் உயிரூட்டியுள்ளார். ராம் மாஸ்டர் அமைத்துள்ள நடன அமைப்பும் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

இந்த பாடலின் மிகப்பெரிய பலம், துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருக்கிடையேயான இயல்பான திரைவேதியியல் (Chemistry) ஆகும். இருவரின் திரைநிகழ்வும், கண்கவர் லொகேஷன்களும், காதல் உணர்வை இன்னும் அழகாக வெளிப்படுத்துகின்றன.

காட்சி அமைப்பு, மெல்லிசை, கவித்துவமான வரிகள், மனதை வருடும் பாடல், அழகான ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் இணைந்து ‘வானே வானே’ பாடலை இந்த ஆண்டின் முக்கியமான காதல் பாடல்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் பல முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவையும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். தொழில்நுட்ப தரத்திலும், காட்சியமைப்பிலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படம் பான் இந்தியா வெளியீடாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button