
இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி திரையில் வெளியான திரைப்படம் தான் “லெவன்”.
இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளியான நாள் முதல் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பலரும் படத்தினை பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், இம்மாதம் 13 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படமானது வெளியானது. திரையரங்குகளுக்குச் சென்று பார்த்திராத பலரும் ஓடிடி தளத்தில் கண்டுகளித்து படத்தினை தங்களது சமூக பக்கத்தில் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்..
அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து படத்தில் ஒரு சில நல்ல காட்சிகளை கோடிட்டும் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். இதனால், படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.
‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார்.
கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருந்தனர்.
இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி என் அழகர்சாமியும், தெலுங்கு வெளியீட்டு உரிமையை ருச்சிரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் என் சுதாகர் ரெட்டியும், மலையாள உரிமையை E4 என்டர்டெய்ன்மென்ட் முகேஷ் ஆர் மேத்தாவும், கர்நாடகா உரிமையை ஃபைவ் ஸ்டார் கே செந்திலும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





