செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா காயரோகணம், பார்த்திபன் குமார், ஸ்ரீஜா ரவி, மோகனசுந்தரம், கவின், ஜனனி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகும் திரைப்படம் தான் ஃபேமிலி படம்.
இசையமைத்திருக்கிறார் அனிவி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மெய்யேந்திரன்.
யுகே கிரியேஷன்ஸ் மூலமாக இயக்குனர் தனது குடும்பமாக சேர்ந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
கதைக்குள் பயணிக்கலாம்…
ஒரு எளிமையான குடும்பம். அம்மா, அப்பா, தாத்தா மற்றும் மூன்று மகன்கள். மகன்களாக விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார் மற்றும் உதய் கார்த்திக் இருக்கின்றனர்.
ஒருவர் மீது ஒருவர் நல்லதொரு பாச உணர்வோடு இருக்கின்றனர். இதில் விவேக் பிரசன்னா வக்கீலாகவும், பார்த்திபன் தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.
நாயகன் உதய், உதவி இயக்குனராக இருக்கிறார். தொடர்ந்து பல தயாரிப்பாளர்களிடம் தனது படத்தின் கதையை கூறி இயக்குனராக ஆக வேண்டி சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார்.
தம்பியின் கனவிற்கு அண்ணன்களும் துணையாக இருக்கின்றனர். ஒருநாள், தயாரிப்பாளர் ஒருவர் உதய்யின் கதையை ஓகே கூறி, ஒப்பந்தமும் செய்து விடுகிறார். படத்தில் பிரபல ஹீரோவை கமிட் செய்ய திட்டமிடுகிறார் தயாரிப்பாளர்.
அந்த பெரிய ஹீரோ, கதை நன்றாக இருப்பதாகவும் ஆனால், உதய் இயக்கினால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிடுகிறார். இதனால் மனம் உடைகிறார் உதய்.
தொடர்ந்து தயாரிப்பாளரிடம் போட்டி போடமுடியாமல், அங்கிருந்து கிளம்பியும் விடுகிறார்.
தனது தம்பிக்காக தாங்களே தயாரிப்பாளராக ஆகிவிட முடிவெடுக்கின்றனர் சகோதரர்கள். அதன்பிறகு உதய்யின் குடும்பமே அவர் எடுக்கும் படத்திற்கு போராடுகிறது. அதன்பிறகு உதய்யின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் உதய் கார்த்திக், கதையின் நாயகனாக நன்றாகவே நடித்திருக்கிறார். காதல் காட்சியாக இருக்கட்டும், தனது குடும்பத்தினர் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை எண்ணி அழக்கூடிய இடமாக இருக்கட்டும், வாழ்க்கையில் எந்த இடத்திலும் சோர்ந்து விடக் கூடாது என்று எண்ணி நிற்கும் இடமாக இருக்கட்டும், என ஒவ்வொரு இடத்திலும் நடிப்பின் திறனை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.
அண்ணன்களாக நடித்திருந்த விவேக் பிரசன்னா மற்றும் பார்த்திபன் குமார் இருவரும் மிகவும் இயல்பான கதாபாத்திரத்தில் நடித்து அழகு சேர்ந்திருந்தனர். இந்த குடும்பத்தைப் பார்த்தால், சிலருக்கு அவர்களுக்கு குடும்பமும் நினைவுகளில் எட்டிப் பார்க்கும்.
ஆங்காங்கே தனது கதாபாத்திரத்திற்கு அழகு சேர்த்த சுபிக்ஷாவின் நடிப்பும் அழகு தான். ஸ்ரீஜா ரவி, மோகனசுந்தரம், கவின், ஜனனி, சந்தோஷ் கேசவன், அரவிந்த் ஜானகிராமன் உள்ளிட்ட நடிகர்களும் படத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் செல்வகுமார் திருமாறன், கதை, திரைக்கதை, இயக்கம், வசனம் என அனைத்திலும் தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆபாச வசனம் இல்லை,
ஆபாச காட்சிகள் இல்லை,
வெட்டு, குத்து, ரத்தம் இல்லை,
ஆபாச நடனம் இல்லை,
எந்த ஒரு இரைச்சலும் இல்லை,
ஒரு குடும்பத்தில் உள்ளவனுக்கு அந்த குடும்பம் எதுவரை உடன் இருக்கிறது என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கக் கூடியம் படம் தான் இந்த ஃபேமிலி படம்.
ஒரு அழகான காவியமாக தான் இந்த ஃபேமிலி படம்.
ஃபேமிலியோடு சென்று பார்க்க வேண்டிய படமாக உருவாகியிருக்கிறது இந்த படம்.
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே படத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறது.