புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை நகர்கிறது. கூலி வேலையில் ஆரம்பித்த அல்லு அர்ஜூனின் பயணம் செம்மரம் கடத்தலுக்கு சென்று அதன்பிறகு அந்த தொழிலை மிகப் பெரிதாக செய்து வருகிறார் அல்லு அர்ஜூன். முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரியான பஹத் பாசிலை அல்லு அர்ஜூன் அவமானம் செய்ததைத் தொடர்ந்து, அல்லு அர்ஜூனை பழி வாங்க துடிக்கிறார் பஹத்.
இது ஒருபக்கம் நகர, அல்லு அர்ஜூன் பல கோடிகளில் புரளும் அளவிற்கு அவரது வளர்ச்சியும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அல்லு அர்ஜுனின் ஊருக்கு வரும் முதலமைச்சர், அல்லு அர்ஜூனை அவமானப்படுத்தி விடுகிறார். இதனால், முதலமைச்சரை மாற்றி விட நினைக்கிறார் அல்லு அர்ஜூன்.
தன்னுடன் இருக்கும் ராவோ ரமேஷை முதலமைச்சராக்க திட்டமிட்டு, அதற்காக பல கோடிகள் தேவைப்படுவதை தொடர்ந்து அதற்காக ஆயிரக்கணக்கான டன்கள் செம்மரங்களை வெட்டுகிறார். மரங்கள் கடத்துதலை பஹத் பாசில் தடுக்கிறார்.
பஹத் காவலை உடைத்து மரங்களை அல்லு அர்ஜூன் எப்படி கடத்தினார்.? ராவோ ரமேஷை முதலமைச்சராக்கினாரா.?? அல்லு அர்ஜூன் தனது குடும்பத்தினரோடு இணைந்தாரா.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
ஒட்டுமொத்த படத்தையும் முழுவதுமாக தனது தோளில் சுமந்து கொண்டு செல்கிறார் நாயகன் அல்லு அர்ஜூன். படம் முழுக்க முழுக்க புஷ்பா..புஷ்பா…. புஷ்பா…. என ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நடை, உடை, பாவனை என படம் முழுவதும் புஷ்பா என்ற கதாபாத்திரத்தை ஒரு இடத்திலிருந்து கூட நகர விடாமல் பின்னி எடுத்திருக்கிறார்.
அதிலும், ஆக்ஷன் காட்சிகளில் மரண அடி அடித்திருக்கிறார். ஆக்ஷனில் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சேலையைக் கட்டிக் கொண்டு வரும் சண்டைக் காட்சியாக இருக்கட்டும், கை கால்களை கட்டிக் கொண்டு வரும் சண்டைக் காட்சியாக இருக்கட்டும் என இரண்டு சண்டைக் காட்சிகளையும் சீட்டின் நுனியில் அமர வைத்து ரசிக்க வைத்து விட்டார் அல்லு அர்ஜூன். மனைவிக்கான முக்கியத்துவம், அம்மாவிற்கான முக்கியத்துவம், குடும்பத்திற்கான முக்கியத்துவம் என பல செண்டிமெண்ட் காட்சிகளை படத்தில் புகுத்தி பெண்களையும் வெகுவாகவே ரசிக்கும்படி காட்சிகளை வைத்திருக்கிறார்கள்.
ரசிகர்களை பல இடங்களில் அவர்களை இருக்கையில் அமர விடாதபடியான சீன்கள் அதிகமாக வைத்து ஆட்டம் போட வைத்திருக்கிறார் அல்லு அர்ஜூன்.
ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல, ஹீரோயின் ராஷ்மிகாவிற்கும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை எடுத்திருக்கிறார் இயக்குனர். அல்லு அர்ஜூனின் மனைவியாக படம் முழுவதிலுமே ஜொலித்திருக்கிறார்.
இருவரும் பாடல் காட்சிகளில் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்கள். நடனத்தில் நானா நீயா என்று போட்டி போட்டுக் கொண்டு தங்களது நடனத்திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைத்திருக்கிறது. சாம் சி எஸ்’சின் பின்னணி இசை வேற லெவல் தான்.
ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். அதிலும், சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவின் பங்கு அபாரம்.
வழக்கமான கமர்ஷியல் படத்தில் தான் கிங் மேக்கர் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சுகுமார். லாஜிக் பார்க்காமல் குடும்பத்தோடு சென்று பார்க்கும்படியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். வசனத்தில் ஆரம்பித்து கதை, திரைக்கதை என அனைத்திலும் தனக்கான பணியை சூப்பராக செய்து முடித்திருக்கிறார் இயக்குனர்.
புஷ்பா படத்தின் மூன்றாம் பாகமும் இருக்கிறது என்ற அறிவிப்போடு படத்தினை முடித்திருக்கிறார்கள்.