Spotlightசினிமா

”ஃபர்ஹானா; தவறான பார்வைக் கொண்டவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்” – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்!

ஃபர்ஹானா திரைப்படம் அனைத்து ரசிகர்களுக்குமானது. மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல. தவறான பார்வைக் கொண்டவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கூறியுள்ளது.

மேலும் நிறுவனம் சார்பில், “ எங்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், கைதி, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று,ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது ஃபர்ஹானா திரைப்படத்தை வரும் மே 12ஆம் தேதி அன்று, ரசிகர்கள் பார்வைக்கு திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

தொடர்ந்து மக்களை மகிழ்விக்கக்கூடிய, சிந்திக்கத் தூண்டும் சிறப்பான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்கள் நிறுவனம் மிகுந்த சமுக பொறுப்புகளை கொண்டே என்றும் செயல்பட்டு வருகிறது. மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது.

ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும் , உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும் , நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல. மேலும் மனித குலத்திற்கு எதிரான ஓரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை, விரும்புவதுமில்லை. இதை எங்களின் ஃபர்ஹானா திரைப்படம் குறித்து அறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.

நம்முடைய தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சொர்க்க பூமி. கலைப் படைப்புகளை மிகவும் மதிக்கும் மண். தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை புரிதல் குழப்பத்தினால் அதன் வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்பதும், சர்ச்சைகளுக்கு ஆளாக்குவதும் முறையானதல்ல. அது அவ்வாறு எதிர்பவர்களையே சரியான புரிதலற்றவர்களாகவே காட்டும். பல நூறு பேரின் கடுமையான உழைப்பில் தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.

இந்தியா போலவே, குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும், மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்தப் படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம், எந்தவித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீடுக்குத் தயாராகிவிட்டது. இதுவே ஃபர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது.

எனவே ஃபர்ஹானா திரைப்படம் குறித்து புரிந்து கொள்ளாத நண்பர்கள் இந்த விளக்கத்தை நல்லமுறையில் ஏற்று, தோழமையுடன் ஒத்துழைப்பை வழங்கிடப் பணிவன்புடன் கோருகிறோம்

Facebook Comments

Related Articles

Back to top button