
அத்திப்பூவாய் அவ்வப்போது தமிழ் சினிமாவில் பூப்பதுண்டு சில சினிமாக்கள். அவ்வகையான சினிமாக்கள் பலரின் மனதை காயப்படுத்தும் அல்லது வலியை ஏற்படுத்தும். சாய்பல்லவி நடிக்க அறிமுக இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கார்கி என்ன மாதிரியான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தப் போகிறது என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
கதைப்படி,
நாயகி சாய்பல்லவி, தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். விரைவில் இவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இவரின் தந்தையான ஆர் எஸ் சிவாஜி தனியார் அபார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.
தாய், தந்தை, தங்கை என நடுத்தர குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் சாய்பல்லவி. இந்நிலையில்,11 வயது சிறுமி 4 வடமாநிலத்தவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்குகிறது.
பல இடங்களில் போராட்டமும் வெடிக்கிறது..
இச்சூழ்நிலையில் தான், சாய் பல்லவியின் அப்பா ஆர் எஸ் சிவாஜி ஐந்தாவது குற்றவாளியாக இச்சம்பவத்தில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இச்செய்தியை கேட்டு உறைந்து போகும் சாய்பல்லவி, தனது தந்தை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க களமிறங்குகிறார். இச்சம்பவத்தால், தனது வேலையை இழக்கிறார் சாய்பல்லவி. சிறுமி பாலியல் வழக்கு என்பதால் எந்த வக்கீல்களும் இவருக்கு ஆதரவாக வாதாட வராத நேரத்தில், வருகிறார் காளி வெங்கட்.
காளி வெங்கட் மற்றும் சாய் பல்லவி இருவரும் உண்மையை கண்டறிந்தார்களா.? ஆர் எஸ் சிவாஜி குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார்களா.? இல்லையா.? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
நாயகி சாய்பல்லவி, கார்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். பல காட்சிகளை சாய்பல்லவியின் கண்களுக்கு வைத்திருக்கிறார் இயக்குனர். வசனங்கள் ஏதுமில்லா பார்வையிலேயே பல ஜாலங்களை செய்து முடித்திருக்கிறார்.
அழகு தேவதையாகவும் யதார்த்தமாகவும் நடித்து ரசிகர்களின் மனதை பல இடங்களில் வருடியிருக்கிறார் சாய் பல்லவி. இவர், பல படங்களில் தனது திறமையை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தாலும், இப்படத்தில் தனி முத்திரையை பதித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
வக்கீலாக காளி வெங்கட், தனது கதாபாத்திரத்தை முழுமையாக செய்து முடித்திருக்கிறார். ஒரு இடத்தில் கூட கதாபாத்திரத்தை விட்டு விலகாமல் கதையோடு பயணித்து பாராட்டைப் பெறுகிறார். அதிலும், திக்கி திக்கி பேசும் அக்கதாபாத்திரத்தின் விதத்தை உணர்ந்து நடித்து ஒருபடி மேல் சென்று பாராட்டதான் தோன்றுகிறது.
மூத்த நடிகர்களான ஆர் எஸ் சிவாஜி, லிவிங்க்ஸ்டன் இருவரும் அனுபவ நடிப்பால் கைதட்டல் வாங்குகிறார்கள். ஒரு காட்சியில் சரவணன் அவர்களின் நடிப்பு கண்களை குளமாக்கி விடுகிறது.
படத்திற்கு மிகப்பெரும் பக்கபலமாக இருந்தது ஒளிப்பதிவும் இசையும் தான். கோவிந்த வசந்தாவின் இசையில் இதுவரை வெளிவந்த படங்களில் இப்படம் தனி முத்திரை தான் பதிக்கும். இளையராஜாவிற்கு அடுத்தபடியாக பல இடங்களில், கதையின் போக்கை உணர்ந்து சைலன்ஸ் கொடுத்து கதையின் ஓட்டத்திற்கு பலமாக இருந்திருக்கிறார்.
க்ளைமாக்ஸ் காட்சியில் சாய்பல்லவியின் தனிமை, படம் பார்ப்பவர்களை அக்கதாபாத்திரமாக மாற வைக்க பின்னணி இசை பெரிதாக கைகொடுத்திருக்கிறது.
யதார்த்த காட்சிகளை கொடுத்து பல இடங்களில் நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
பத்திரிகையாளராக ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒரு சில காட்சி என்றாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் பேசும் வசனங்கள் கைதட்டல் கொடுக்க வைக்கிறது.
நீதிபதியாக திருநங்கை தனது கேரக்டரை முழுமையாக செய்து முடித்திருக்கிறார். வக்கீல் ஏளனம் பேசும்போது, அதை எதிர்த்து திருநங்கை வீசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாள் கொண்டு சுழல்கிறது.
படத்தின் இயக்குனர் கெளதம் ராமச்சந்திரனுக்கு பெரிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.
சமூகத்தில் ஒரு அவலத்தை கண்முன்னே கொண்டு வந்து பலரையும் நீதிக்காக கார்கியுடன் நம்மையும் களத்திற்கு இழுத்துச் சென்று பயணப்பட வைத்துவிட்டார் இயக்குனர். ஒரு வாழ்வியலை கண்முன்னே நிறுத்திய இயக்குனருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.