
தமிழ் சினிமாவில் மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களை எடுத்துக்காட்டிய படங்கள் பல வந்திருக்கின்றன. அந்த வரிசையில், வாட்ச் படமும் இணைந்து தன் பங்கிற்கு தன்னால் முடிந்த அவலங்களை தனது கோணத்தில் எடுத்துக் கூற வந்திருக்கிறது.
ஆர்ட் கலைஞராக இருக்கும் நாயகன் க்ரிஷ், ஒரு நாள் தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது பத்திரிகையாளர் ஒருவர் வழிப்போக்கராக ஏறிக் கொள்கிறார். அப்போது, தன்னிடம் மிகப்பெரும் மெடிக்கல் மாஃபியா பற்றிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறுகிறார். அப்போது தவறுதலாக அந்த ஆவணங்களை காரிலேயே விட்டுச் செல்கிறார்.
அந்த ஆவணங்களை நாயகன் கிரிஷ் எடுத்து, அவரிடம் கொடுக்கச் செல்லும் போது மெடிக்கல் மாஃபியா கும்பல் அந்த பத்திரிகையாளரை கொலை செய்து விடுகிறது. தொடர்ந்து அந்த ஆவணங்களை போலீஸ் ஒருவரிடம் கொடுக்க முயலும் கிரிஷ், போலீஸும் மாஃபியா கும்பல் என்று அறிந்து கொள்கிறார்.
மாஃபியா கும்பலிடம் ஹீரோ கிரிஷ் சிக்கிக் கொள்ள, அவரை பயங்கரமாக தாக்கி விடுகின்றனர். இதனால் மூன்று வருடங்கள் கோமோவிற்கு சென்று விடுகிறார் கிரிஷ்.
மூன்று வருடத்திற்கு பிறகு பழைய நினைவு வரும் நாயகன் கிரிஷிற்கு அடுத்து என்ன நடந்தது .? மெடிக்கல் மாஃபியா கும்பலை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை..
நாயகன் கிரிஷ் தன் வேடத்துக்கேற்ப துடிப்புடன் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருந்த சப்ரினா கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறார்.
வில்லன்கள் மேத்யூ வர்கீஸ், உதயகுமார் உள்ளிட்ட நடிகர்கள் தத்தம் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
முகமது அமீன், விக்னேஷ் வாசு,இனியகதிரவன், கலைச்செல்வன் ஆகிய நால்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
படத்தின் தொடக்கத்தில் மும்பை மாநகரை வானிலிருந்து சுற்றிக்காட்டும் ஒளிப்பதிவாளர்கள் அதன்பின் சென்னையை மற்றும் கடற்புறங்களை வானிலிருந்தும் தரையிலிருந்தும் சுற்றிக் காட்டுகிறார்கள். எத்ற்காக இப்படி சுற்றவிடுகிறார்கள் என்று நமக்கும் தெரியவில்லை அவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது.
சுகன்யன் சுந்தரேஸ்வரன் இசையில் பாடல்கள் கதையை விளக்கிச் செல்கின்றன. பின்னணி இசை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் அசோகன். தமிழ் சினிமாவில் தோன்றிய 1000 மெடிக்கல் மாஃபியா படங்களில் இதுவும் சேர்கிறது என்பதை பெருமையாக கூறிக் கொள்ளலாம்.




