SpotlightUncategorizedவிமர்சனங்கள்

கட்டா குஸ்தி – விமர்சனம் 4/5

யக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கட்டா குஸ்தி.

மக்கள் மத்தியில் ட்ரெய்லர் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படத்தின் மீதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த எதிர்பார்ப்பை கட்டா குஸ்தி நிவர்த்தி செய்ததா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

கேரளா பாலக்காட்டில், குஸ்தி போட்டியில் சாம்பியனாக விளங்குகிறார் கீர்த்தி ((ஐஸ்வர்யா லக்‌ஷமி)). பாப் கட்டிங்க் லுக்கில் அனைவரையும் “வந்து பார்” என்று துணிச்சலாக நிற்கக் கூடியவர் கீர்த்தி.

இச்சூழலில், திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் தருணத்தில் இவரின் தோற்றத்தைப் பார்த்து ஒருவர் கூட நெருங்க மறுக்கின்றனர்.

தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் ஊரில் கபாடி விளையாடிக் கொண்டு ஊர் சுற்றி கொண்டிருப்பவர் தான் வீரா((விஷ்ணு விஷால்)). இடுப்புக் கீழே தலைமுடி, 7வது வரை மட்டுமே படிப்பு போதும் என இந்த தகுதியோடு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

விஷ்ணு விஷாலின் மாமாவாக வரும் கருணாஸும், ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் சித்தப்பாவாக வரும் முனிஸ்காந்தும் சிறுவயது நண்பர்கள். இருவரும் ஒரு இடத்தில் சந்திக்க பேச்சு வளர்ந்து விஷ்ணு விஷாலை எப்படியாவது தனது அண்ணன் மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று எண்ணுகிறார்.

இதற்காக, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி 7வது வரை தான் படித்திருக்கிறார் என்றும், நீளமாக தலைமுடி இருக்கிறது என்றும் ஏமாற்றி விஷ்ணு விஷாலுக்கு அவரை திருமணம் செய்து வைக்கிறார் முனிஸ்காந்த்.

தன் பொற்றோர்களுக்காக, உயிராக நினைத்த குஸ்தியை ஓரம்கட்டிவிட்டு, இல்லற வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. நாட்கள் கடந்து செல்ல, ஒருநாள் ரெளடிகள் விஷ்ணு விஷாலை கொல்ல முயற்சிக்கும் போது, அதுவரை அமைதியாக இருந்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி அதன் பிறகு ரெளடிகளை ஆக்‌ஷனின் பந்தாடுகிறார்.

ஐஸ்வர்யா லக்‌ஷ்மி யார் என்பது அதன்பிறகு விஷ்ணு விஷாலுக்கு தெரிய வருகிறது. அதற்குபின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

விஷ்ணு விஷால்

முதலில் இப்படத்தின் கதைக்கு ஓகே சொல்லி நடித்ததற்கு இவருக்கு பூங்கொத்தை பரிசளிக்கலாம். பெண்களின் உரிமை, பெண்களின் சுதந்திரம் என முழுக்க முழுக்க பெண்களை உயர்த்தி பிடிக்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஒரு உயர்ந்த நட்சத்திரமாக விளங்கும் விஷ்ணு விஷால் நடித்திருப்பது பாராட்டுதலுக்குறியது. வீரா என்ற கதாபாத்திரத்தில் லுக் கனக்கச்சிதமாக பொருந்திருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகள் இவர் எடுக்கும் அவதாரமான சண்டைக் காட்சிகள் அப்லாஷ்.

ஆங்காங்கே தெறிக்க வைக்கும் காமெடி காட்சிகளில் இவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்ஸ் அல்டிமேட்

ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

நாயகியாக இப்படத்திற்கு சரியான தேர்வு. குஸ்தி வீராங்கனையாக இப்படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா. பொன்னியின் செல்வன் பூங்குழலி ரசிகர்களை எந்த இடத்திலும் ஏமாற்றாமல், அதை விட பல மடங்கு கூடுதலான ஒரு நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா. அதிலும், முதலிரவு முடிந்ததும் மறுநாள் அதிகாலையில் வரும் காட்சிகளில் திரையரங்கே சிரிப்பலையில் அதிர்ந்து போகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகப்படியானவர்களை தன்வசம் இழுத்து வைக்கும் அசாத்திய நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா…

மற்றபடி, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட் மற்றும் கிங்க்ஸ்லி இவர்கள் நால்வரும் படத்திற்கு பெரும் பலம் தான். இவர்கள் டைமிங்க் சமயத்தில் அடிக்கும் காமெடிகள் படத்திற்கு வலுவாக உள்ளது. கருணாஸ் அவர் உடன் இருப்பவர்கள் சரக்கு அடித்து பேசும் காட்சியில் அப்ளாஷ் தான். “சூப்பரப்பு…”

ஏதோ வந்தோம் காமெடி சொன்னோம் என்று செல்லாமல், இந்த சமுதாயம் பெண்களை நம் நாட்டில் விளையாட்டிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை நெத்தி பொட்டில் அடித்தாற்போல் கூறி தனது ஆழமான கருத்தை தெளிவாக பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.

கதைக்களமும் அழகான காட்சியமைப்பும் படத்தின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறது. ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் அழகூற கொடுத்திருக்கிறது. அதிலும், கோவில் திருவிழா சண்டைக் காட்சி அசத்தல்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான் என்றாலும், பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். அன்பரிவ் மாஸ்டரின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மாஸ் காட்சிகளை கொடுக்க கைகொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் கட்டா குஸ்தி, திருமணம் ஆன, ஆகாத அனைவரும் கண்டுகளிக்க குடும்பத்தோடு சென்று வர தரமான படைப்பாக வெளிவந்திருக்கிறது.

கட்டா குஸ்தி – கல்லா கட்டும்…

Facebook Comments

Related Articles

Back to top button