Spotlightவிமர்சனங்கள்

வதந்தி – விமர்சனம் 3.5/5

யக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் அமேசானில் வெளிவந்திருக்கும் இணையத் தொடர் தான் “வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி”..

சுழல் என்ற மாபெரும் படைப்பைக் கொடுத்த புஷ்கர்-காயத்ரி டீம், இப்படத்தை தயாரித்திருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இதன் ட்ரெய்லர், பலராலும் பேசும் பொருளாகவும் மாறியது.

கதைப்படி,

கன்னியாகுமரி அருகே காற்றாலை அதிகம் இருக்கும் அந்த நிலத்தில் படப்பிடிப்பு நடத்த வருகிறது ஒரு படக்குழு.

அங்கு அடையாளம் தெரியாத இறந்து 3 நாட்கள் ஆன நிலையில் ஒரு இளம் பெண்ணின் உடலை அவர்கள் பார்க்கின்றனர்.

இதனால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. போலீஸ் விசாரணை நடத்துகிறது. போலீஸ் விசாரணை நடத்த, அது காணமல் போன பிரபல திரைப்பட நடிகை என கண்டறிகின்றனர்.

பின், அது நான் அல்ல என்று காணாமல் போன நடிகை மீண்டு வர, போலீஸுக்கு அழுத்தம் அதிகமாகிறது. பின்பு, கன்னியாகுமரியில் லாட்ஜ் ஒன்றை நடத்தி வரும் லைலாவின் மகளாக வரும் வெலோனி தான் அது என்று கண்டுபிடிக்கிறார்கள்.

வெலோனி எதற்காக கொலை செய்யப்பட்டார்.? யாரால் கொலை செய்யப்பட்டார்.? என்று கண்டறிய சப்-இன்ஸ்பெக்டராக வரும் எஸ் ஜே சூர்யாவிடம் இந்த வழக்கு கொடுக்கப்படுகிறது.

மனைவி ஆனந்தி (ஸ்ச்மிருதி வெங்கட்), ஒரு வயதான மகன் அப்புச்சி என மிடிள் கிளாஸ் வாழ்க்கையாக வாழ்ந்து வருகிறார் எஸ் ஜே சூர்யா.

வழக்கை தனது பாணியில் விசாரிக்கிறார் எஸ் ஜே சூர்யா.

இறந்த 18 வயதான வெலோனியின் வாழ்க்கையை மீடியா பந்தாடுகிறது. அவளது அழகை வைத்து தவறான பார்வையில் அவளை சமூகம் பார்வையிடுகிறது.

இந்த செய்திகள் அனைத்தும் வதந்தியாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா எஸ் ஜே சூர்யா.? என்பதே இந்த தொடரின் மீதிக் கதை.

வெலோனியை திருமணம் செய்யப் போகும் குமரன் தங்கராஜன் ஆரம்பித்து, அவளை ஒரு தலை காதல் புரியும் டோனி, காட்டிற்குள் வேட்டையாடும் அண்ணன் தம்பிகள் மூவர், டாக்டர், காமூகன் வலன், லைலா என பலர் மேலும் இந்த வழக்கைக் கொண்டு சென்று தனது விசாரணையை நடத்துகிறார் எஸ் ஜே சூர்யா.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மேல் விழும் முடிச்சுகள் ஒவ்வொன்றும் அவிழ்ந்துவிட, எப்படி கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது இறுதி ஸ்வார்ஸ்யம். விவேக் பிரசன்னாவின் டைமிங்க் கெளண்டர்கள், கன்னியாகுமரி பேச்சு மொழி இரண்டும் நம்மை எண்டர்டெயின்மெட் செய்ய பலமாக இருந்தது.

ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிய தூண்கள் என்றால் அது இந்த இருவர் மட்டுமே வெலோனியாக நடித்த சஞ்சனாவும் விவேக் கதாபாத்திரத்தில் நடித்த எஸ் ஜே சூர்யாவும் தான்.

தனக்கு கொடுக்கப்பட்டதை மிக தெளிவாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. தனது உடல் மொழி, கண் பார்வை, மிரட்டும் தோனி, கோபம் என அனைத்தையும் ஒருசேர இப்படத்தில் கொடுத்து மிரள வைத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. இந்த வழக்கால் தான் பட்ட இன்னல்களை நீண்ட வசனமாக விடாமல் பேசும் காட்சிக்கு எழுந்து நின்றே கைதட்டலாம்.

லைலாவுடனான காட்சியில் ஒரு நிமிடம் மாநாடு படத்தில் தோன்றிய எஸ் ஜே சூர்யாவை கண்டு ரசிக்கலாம். அப்படியொரு மிரட்டலான நடிப்பைக் கொடுத்து பார்ப்பவர்களை அசரடித்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

வெலோனியாக நடித்திருந்த சஞ்சனா…

ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார். காட்சிக்கு காட்சி கூடுதல் அழகோடு நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் சஞ்சனா. அதிலும், ஒரு கதாபாத்திரம் அவளை அழைத்துச் சென்ற போது, அவளது அழகும், கொஞ்சலும், காதலும், வேதனையும், தனிமையும் என அவள் கதாபாத்திரத்தில் நம்மையும் உடன் அழைத்துச் செல்லும் அளவிற்கு மிகக் கச்சிதமான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சஞ்சனா.

ஆங்கிலோ இண்டியனாக சஞ்சனாவின் தாயாக நடித்த லைலாவின் நடிப்பையும் நாம் பாராட்டிதான் ஆகவேண்டும். அதிலும், கடைசி தொடரில் இவர் மேல் பயணப்படும் கதை யாரும் கணிக்காத ட்விஸ்ட் தான்.

காட்டில் வாழும் தாய் மற்றும் மூன்று மகன்கள் இவர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளனர். டேனி மற்றும் விக்னேஷ் கதாபாத்திரங்களில் நடித்த இருவருமே கதைக்கேற்ற சரியான தேர்வு தான். அதிலும், விக்னேஷாக கதாபாத்திரத்தில் வாழ்ந்த குமரன் தங்கராஜ்ஜை வெகுவாக பாராட்டலாம். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு காலடி எடுத்து வைத்து அதில் முத்திரையும் பதித்திருக்கிறார்.

வலன் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும் தனது தோற்றத்தாலும், குரலாலும் காட்சிக்கு காட்சி மிரட்டியிருக்கிறார்.

பிரபல நாவலாசிரியராக வரும் நாசரும் கதையின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறார். எடுத்துக் கொண்ட கதையில் எந்த வித மாற்றமும் செய்யாமல் சரியாக பயணித்து தொடர் முழுவதையும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். கதை எடுக்கப்பட்ட மண்ணும் அதன் சூழ்நிலையும் கண்களுக்கு விருந்து படைத்துள்ளது. கதை செல்லும் வேகத்தை இன்னும் சற்று வேகம் ஏற்றியிருந்தால், வதந்தி காட்டுத்தீயாக பரவியிருக்கும்.

வேகம் குறைந்து பொறுமையை ஆங்காங்கே சற்று சோதித்தாலும், ஒளிப்பதிவும் பின்னணி இசையும் நம்மை அசைய விடாமல் கட்டிப்போட்டு விடுகிறது.

சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து தான். இப்படியொரு காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார் சரவணன். சைமன் கே கிங் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. கதையோடு பயணித்து நாம் செல்ல பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது.

மொத்தத்தில்

வதந்தி – வச்ச கண்ணு விலகாது.. 

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close