
தனது உடற்கட்டு சரிவர ஒத்துழைக்காததால், காவல்துறை பணியில் சேர முடியாமல் ஒரு தனியார் செக்யூரிட்டி கம்பெனியில் காவலாளி பணியில் சேர்கிறார் யோகிபாபு.
சென்னையில் உள்ள ஒரு மிகப்பெரிய மாலில் செக்யூரிட்டியாக பணிக்கு அமர்த்தப்படுகிறார் இவர். ஒரு மிகப்பெரிய தீவிரவாத கும்பல், அந்த மாலை(Mall) ஹைஜேக் செய்கிறது. அந்த மாலில் உள்ள பொதுமக்கள் சிலரை பிணையக்கைதிகளாக அடைத்து வைத்துக் கொள்கின்றனர்.
பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து யோகிபாபு எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.
ஆரம்பிக்கும் முதலே காமெடி என்ற வட்டத்திற்குள் செல்லும் படம், நம்மை மிகவும் கடுப்பேற்றுகிறது. அதிலும் யோகிபாபு – ரவி மரியா’வின் காட்சிகள் எரிச்சலடையதான் வைத்திருக்கிறது. ரவி மரியா கத்திக் கொண்டே பேசும் காட்சிகள் நம்மை மேலும் கடுப்பேற்றதான் வைக்கிறது.
முதல் பாதி முழுவதும், ‘ ஏண்டா இந்த படத்துக்கு வந்தோம்’ என்று கடுப்பேற்றினாலும், இடைவேளைக்குப் பிறகு கியர் போட்டு மெதுவாக நகர ஆரம்பிக்கிறது.
கதை அந்த மாலுக்குள் சென்ற பிறகு காட்சிகள் அனைத்தும் நம்மை சிரிப்பூட்ட துவங்குகிறது. சார்லியோடு சேர்ந்து யோகி பாபு அடிக்கும் லூட்டிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது.
அதன்பிறகு, ஆனந்தராஜ் எண்ட்ரீ ஆன பிறகு டாப் ஹியர் போட்டு வேகமாக கதை நகர, மேலும் சிரிப்பலை திரையரங்கை அதிர வைக்கிறது. பழைய நோக்கியா மொபைலை வைத்துக் கொண்டு அடித்த காமெடி களபரங்கள் நம்மை ரசிக்க வைக்கிறது. யோகிபாபுவோடு இணைந்து பயணிக்கும் Undertaker என்ற நாய் குழந்தைகளை ரசிக்க வைக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் ராஜ் பரத், ரொம்ப சீரியஸாக இருப்பது கொஞ்சம் கதைக்கு சறுக்கல். லாஜீக் மீறல்கள் எல்லை தாண்டி செல்கிறது. மனோபாலா, மயில்சாமி, ஆனந்த்ராஜ் ஆகிய காமெடி ஜாம்பவான்கள் ரசிக்க வைக்கின்றனர்.
இயக்குனர் சாம் ஆண்டன் தனது இயக்கத்தை நல்லபடியாக படைத்திருந்தாலும், கதை என்று ஒன்று இல்லாமல் படத்தை இயக்குவது எதுவரை சாத்தியாகும் என்று தெரியவில்லை.
ராஜ் ஆரியனின் இசையில் பின்னனி இசை ஓகே ரகம். ரூபனின் எடிட்டிங் ஷார்ப்..
கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்தையும் அழகுபடுத்தியிருக்கிறது.
கூர்கா – கவலை மறந்து சிரிக்க வைப்பான்..