பியார் பிரேமா காதல் படத்ஹின் வெற்றியில் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் ஹரீஷ் கல்யாண், அடுத்ததாக புரியாத புதிர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் மீண்டும் ஒரு காதல் கதையில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, “ஆம், இது தனித்துவமான முறையில் சொல்லப்படும் பயண பின்னணியிலான ஒரு பிடிவாதமான காதல் கதை. ஹரீஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அவரது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவரை அடுத்த நிலைக்கு நிச்சயமாக உயர்த்தும். ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.
மா கா பா ஆனந்த், பாலசரவணன், பொன்வண்ணன் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். ரஞ்சித் ஜெயக்கொடியின் முந்தைய படமான புரியாத புதிர் படத்தில் இசை விருந்து வைத்த சாம் சி.எஸ் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பயண பின்னணியில் உருவாகும் இந்த படம் சென்னையிலும், மிகவும் அழகான லே மற்றும் லடாக் பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.
இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் படக்குழு, படத்தின் தலைப்பு மற்றும் சிங்கிள் பாடல் ஒன்றையும் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறது. மாதவ் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் பாலாஜி கப்பா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.