
தமிழ் சினிமாவில் காதல், குடும்பம், காமெடி ஆகியவற்றை கலந்து சொல்லும் கதைகள் எப்போதும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில், காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறும் இரு வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்களின் வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்திருக்கும் திரைப்படம் ‘ஹாய்’.
விஷ்ணு எடவன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் கவின், நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு, அம்ருதா சீனிவாசன், VTV கணேஷ், ஃபெப்சி விஜயன், ரெஞ்சி பணிக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கதை
மனதளவில் அதிகப்படியான வலியைத் தாங்க முடியாதவராகவும், எந்த விஷயத்திலும் துணிந்து முடிவெடுக்க முடியாதவராகவும் இருக்கிறார் கவின். பாக்யராஜ் – ராதிகா சரத்குமார் தம்பதியின் மகனாக வரும் அவர், காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால், அவரது பயந்த சுபாவமும் தயக்கமும் காரணமாக அவரைப் பார்க்க வரும் பெண்கள் ஒவ்வொருவராக விலகிச் செல்கின்றனர்.

வயது அதிகரித்துக் கொண்டே செல்வதால், மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என பெற்றோர் முயற்சி செய்கின்றனர். இதனால் விரக்தியடையும் கவின், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வருகிறார். அங்கு வேலை பார்த்துக்கொண்டு தனியாக வசித்து வருகிறார்.
மறுபுறம், பிரபுவின் மகளாக வரும் நயன்தாராவுக்கும் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அவரது விருப்பத்திற்கு மாறாக, கந்துவட்டி தொழில் செய்யும் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர். திருமணத்தை விரும்பாத நயன்தாரா, அந்த திருமணத்தை நிறுத்திவிட்டு சென்னைக்கு வந்து விடுகிறார்.
எதிர்பாராதவிதமாக கவின் வசிக்கும் வீட்டின் அருகிலேயே நயன்தாராவும் குடியேறுகிறார். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகும் இருவருக்கும் இடையே நாளடைவில் நெருக்கம் உருவாகிறது. நயன்தாரா தான் தனக்கான சரியான ஜோடி என்பதை உணரும் கவின், தனது காதலை சொல்லத் தயாராகிறார்.

ஆனால், நயன்தாராவோ வாழ்க்கையில் தனக்கு எந்தவித பிடிப்பும் இல்லை என்றும், விரைவில் லண்டன் சென்று அங்கு வேலை பார்த்து செட்டிலாகிவிட வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் மீண்டும் தனது காதல் கைநழுவிவிட்டதாக கவின் வருத்தப்படுகிறார்.
இந்த சூழலில் நடைபெறும் எதிர்பாராத சம்பவம், இருவரையும் கவினின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு என்ன நடக்கிறது? கவின் – நயன்தாராவின் காதல் என்ன ஆனது? இருவரும் இறுதியில் இணைந்தார்களா? என்பதற்கு காமெடி, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் பதில் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘ஹாய்’.
கவின் – நடிப்பில் அசத்தல்
கவினுக்கு இந்தப் படம் நல்லதொரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. பயம், தயக்கம், காதல், செண்டிமெண்ட், கண்ணீர் என கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளையும் தனது எக்ஸ்பிரஷன்கள் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக காமெடி காட்சிகளில் அவரது டைமிங் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும், குடும்பத்தினரிடம் சிக்கித் தவிக்கும் தருணங்களிலும் ரசிகர்களை ஈர்க்கிறார். தொடர்ந்து வந்த சில படங்களுக்குப் பிறகு, கவினுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய படமாக ‘ஹாய்’ அமைந்திருக்கிறது.
நயன்தாரா – வழக்கமான அழகும் கம்பீரமும்
நயன்தாரா திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியையும் தனது அழகாலும், இயல்பான நடிப்பாலும் நிறைத்திருக்கிறார். தேவயானி கதாபாத்திரத்தில் காதல், பிடிவாதம், சுதந்திரமான சிந்தனை என கதாபாத்திரத்திற்குத் தேவையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கவின் – நயன்தாரா இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
நட்சத்திர பட்டாளத்தின் பங்களிப்பு
பாக்யராஜ் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் கவினின் பெற்றோராக சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கவினை ராதிகா கன்னத்தில் அறையும் காட்சியில் அவரது வசனங்களும் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.
பிரபுவும் தனது அனுபவமான நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கிறார். இவர்களுடன் வரும் மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு தேவையான பங்களிப்பை வழங்குகின்றனர்.
குறிப்பாக ஆதித்யா கதிர் காமெடியில் தனி கவனம் பெறுகிறார். அவரது கவுண்டர் வசனங்களும், டைமிங்கும் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன.

இசை & ஒளிப்பதிவு
ஜான் மார்ட்டினின் இசை படத்தின் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு நன்றாகப் பொருந்துகிறது. பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் பொழுதுபோக்கு அம்சத்தை அதிகரிக்கின்றன.
ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு படத்திற்கு வண்ணமயமான தோற்றத்தைக் கொடுத்துள்ளது. காதல் காட்சிகள் முதல் குடும்ப பின்னணி கொண்ட காட்சிகள் வரை காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறார்.
பிலோமின் ராஜின் படத்தொகுப்பும் கதையின் வேகத்திற்கு உதவுகிறது.
இயக்கம் எப்படி?
விஷ்ணு எடவன் ஒரு எளிமையான காதல் கதையை காமெடி மற்றும் குடும்ப உணர்வுகளுடன் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார்.
முதல் பாதியில் ஆங்காங்கே சில சிறிய தடுமாற்றங்கள் இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை வேகம் பிடிக்கிறது. குறிப்பாக காமெடி மற்றும் எமோஷன் ஆகிய இரண்டையும் சரியான அளவில் கலந்து கொடுத்து ரசிகர்களை ஈர்க்கிறார்.

இண்டர்வெல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் படத்தின் முக்கியமான பலங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக கிளைமாக்ஸை நோக்கி செல்லும் விதம் ரசிகர்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட்டை வழங்குகிறது.
மொத்தத்தில்…
பெரிய சிக்கலான கதையை எதிர்பார்க்காமல், காதல், காமெடி, குடும்ப உணர்வு என ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெயின்மெண்ட்டை ரசிக்க விரும்புபவர்களுக்கு ‘ஹாய்’ நல்ல தேர்வாக அமைகிறது.
கவினின் நடிப்பு, நயன்தாராவின் திரை வசீகரம், நட்சத்திர பட்டாளத்தின் பங்களிப்பு, காமெடி காட்சிகள் மற்றும் இரண்டாம் பாதையின் வேகம் ஆகியவை படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
தொடர்ச்சியான படங்களின் எதிர்பார்த்த வெற்றிக்குப் பிறகு, கவினுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்திருக்கிறது இந்த ‘ஹாய்’.





