Spotlightவிமர்சனங்கள்

Immortal Movie Review 2.5/5

ஜி.வி.பிரகாஷ் குமார், கயடு லோஹர் நடிப்பில், மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இம்மார்டல்’. ஏ.கே. ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி படத்தை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது. காதல், காமெடி, ஃபேண்டஸி, மான்ஸ்டர் என பல அம்சங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘இம்மார்டல்’ ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

தனது மாமாவின் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் கெடு விதிக்கிறார். இதனால் ஷேரிங் முறையில் தங்குவதற்கு ஒரு வீட்டைத் தேடி அலைகிறார்.

அந்த நேரத்தில் அழகான பெண் குரலில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தனது வீட்டை ஷேர் செய்து கொள்ள விருப்பமா என்று அந்தப் பெண் கேட்க, உடனே அந்த வீட்டிற்குச் செல்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

பிரம்மாண்டமான அப்பார்ட்மென்ட்டின் 25-வது மாடியில் வசிக்கும் அந்த மர்மப் பெண் கயடு லோஹர். இருவரும் ஒரே வீட்டில் தங்க ஆரம்பிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் கேட்காமலேயே அவருக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்கிறார் கயடு. அவரது அன்பிலும் அழகிலும் மயங்கும் ஜி.வி.பிரகாஷ், ஒரு கட்டத்தில் அவர் மீது காதலில் விழுகிறார்.

ஆனால், கயடு லோஹரின் நடவடிக்கைகளில் சில மர்மங்கள் இருப்பதை உணரும் ஜி.வி.பிரகாஷுக்கு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. கயடு ஒரு சாதாரண மனிதப் பிறவியே இல்லை என்பதை அவர் அறிந்து கொள்கிறார்.

அப்படியானால் கயடு லோஹர் உண்மையில் யார்? அவரது பின்னணி என்ன? ஜி.வி.பிரகாஷுக்கு அதன் பிறகு என்ன நடக்கிறது? மான்ஸ்டருக்கும் கயடுவுக்கும் என்ன தொடர்பு? என்பதற்கான பதில்களை ஃபேண்டஸி பின்னணியில் இரண்டாம் பாதியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மாரியப்பன் சின்னா.

முதல் பாதியின் பலம் கயடு லோஹர்

படத்தின் முதல் பாதியை பெரும்பாலும் தனது தோளில் சுமந்து செல்கிறார் கயடு லோஹர். அவரது அழகையும் திரைத் தோற்றத்தையும் கேமரா ரசிக்கும்படி பதிவு செய்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் – கயடு இடையேயான காட்சிகள் முதல் பாதியை இலகுவாக நகர்த்துகின்றன.

காதல், காமெடி என பயணிக்கும் கதை, கயடு யார் என்ற மர்மத்தை நோக்கி நகரும்போது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக முதல் பாதியில் கயடுவைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் மர்மம் படத்திற்கு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.

முதல் பாதியில் காதல் மற்றும் மர்மத்தை மையமாக வைத்து நகர்ந்த படம், இரண்டாம் பாதியில் முழுமையான ஃபேண்டஸி கதைக்குள் நுழைகிறது. மான்ஸ்டர் தொடர்பான ப்ளாஷ்பேக் காட்சிகள், அதன் பின்னணி மற்றும் அதை வேட்டையாடும் காட்சிகள் என படத்தின் களம் முற்றிலுமாக மாறுகிறது.

மான்ஸ்டரை சிஜி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். அதற்காக தயாரிப்பு தரப்பில் செலவு செய்திருப்பதும் திரையில் தெரிகிறது. ஆனால், அந்த மான்ஸ்டர் மற்றும் அதைச் சுற்றியுள்ள காட்சிகள் பார்வையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டிய மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது படத்தின் குறையாகிறது.

ஃபேண்டஸி உலகம், மான்ஸ்டர், காதல் என சுவாரஸ்யமான அம்சங்கள் இருந்தாலும், அவற்றை ஒன்றிணைக்கும் திரைக்கதை இன்னும் வலுவாக இருந்திருந்தால் ‘இம்மார்டல்’ வேற லெவல் அனுபவமாக அமைந்திருக்கும்.

ஜி.வி.பிரகாஷ் தனது வழக்கமான பாணியில் நடித்திருக்கிறார். காதல் மற்றும் காமெடி காட்சிகளில் இயல்பாக இருந்தாலும், கதையின் தீவிரமான மற்றும் ஃபேண்டஸி தருணங்களில் இன்னும் அழுத்தமான நடிப்பு தேவைப்பட்டதாக தோன்றுகிறது. இந்த கதாபாத்திரத்திற்கு அவர் முழுமையாக பொருந்தியிருக்கிறாரா என்ற கேள்வியும் சில இடங்களில் எழுகிறது.

மறுபுறம் கயடு லோஹர் படத்தின் முக்கிய ஈர்ப்பு. அழகு மட்டுமல்லாமல் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்திற்குத் தேவையான திரை இருப்பையும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக முதல் பாதியில் படத்தை தொடர்ந்து பார்க்க வைப்பதில் அவரது கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

லொள்ளு சபா மாறன் மற்றும் ஆதித்யா கதிர் வரும் காமெடி காட்சிகள் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. படத்தின் சீரியஸ் மற்றும் ஃபேண்டஸி காட்சிகளுக்கு இடையே இவர்களது காமெடி சிறிய ரிலீஃப் கொடுக்கிறது.

‘இம்மார்டல்’ படத்தின் முக்கியமான டெக்னிக்கல் பலங்களில் ஒன்று சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை. காதல் காட்சிகளாக இருந்தாலும் சரி, மர்மம் மற்றும் மான்ஸ்டர் தொடர்பான காட்சிகளாக இருந்தாலும் சரி, பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான விறுவிறுப்பை கூட்டுகிறது.

அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக அப்பார்ட்மென்ட் காட்சிகள், கயடு லோஹரின் காட்சிகள் மற்றும் ஃபேண்டஸி காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். படத்தின் விஷுவல் தரத்தை உயர்த்துவதில் ஒளிப்பதிவின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு காதல் கதையாக தொடங்கி, மர்மத்தை உருவாக்கி, பின்னர் மான்ஸ்டர் ஃபேண்டஸியாக மாறும் ஐடியா சுவாரஸ்யமானதுதான். ஆனால் அந்த ஐடியாவுக்கு தேவையான வலுவான திரைக்கதை மற்றும் உணர்வுப்பூர்வமான இணைப்பு முழுமையாக அமையாததால் படம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது.

கயடு லோஹரின் திரை இருப்பு, சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் சில காமெடி காட்சிகள் படத்தின் பாசிட்டிவ் அம்சங்கள். அதே நேரத்தில் கதையின் ஈர்ப்பு, இரண்டாம் பாதியின் திரைக்கதை மற்றும் மான்ஸ்டர் காட்சிகளின் தாக்கம் ஆகியவை இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.

மொத்தத்தில், காதல் + மர்மம் + மான்ஸ்டர் ஃபேண்டஸி என்ற வித்தியாசமான முயற்சியாக வந்திருக்கும் ‘இம்மார்டல்’, சிறந்த ஐடியாவை வைத்திருந்தாலும் அதை முழுமையான திரை அனுபவமாக மாற்றுவதில் சற்றே தடுமாறுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button