
இயக்குனர் கார்த்தி ராம் இயக்கத்தில் பிஜு அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் தான் “சிதை”. பெண்களின் உறுப்பு சிதைத்தலை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இக்குறும்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
நேர்த்தியான வசனங்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது இக்குறும்படம்.
அதுமட்டமல்லாமல், இக்குறும்படம் இதுவரை சுமார் 232 விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளுக்கு இக்குறும்படம் சென்று விருதுகளை குவித்திருக்கிறது.
இந்நிலையில், இக்குறும்படத்தின் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜி கே திருநாவுக்கரசு, சரவணன், மதியழகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பலரும் இக்குறும்படம் இத்தனை விருதுகளுக்குமேல் இன்னும் பல விருதுகளை குவிக்க தகுதியான ஒன்று தான் என்று கூறினார்கள்.
அடுத்தகட்டமாக, வெள்ளித்திரை படம் எடுத்து இயக்குனர் கார்த்தி ராம் மிகப்பெரும் வெற்றியை அடைய வேண்டும் என்று அனைவரும் வாழ்த்து கூறினர்.
இக்குறும்படம் பல விருதுகளை குவிக்க காரணமாக இருந்தவர்களுக்கு படத்தின் ஷீல்ட் வழங்கப்பட்டது. மேலும், விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் பிஜு, மரக்கன்று கொடுத்து தனது நன்றியை தெரிவித்தார்.
பெண்கள் பல துறைகளில் உயர்ந்து விட்டாலும் இன்றும் பெண்களுக்கு எதிரான பெண் உறுப்பு சிதை உள்ளிட்ட பல கொடுமைகள் நவீன உலகத்திலும் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றன. இவை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.
‘சிதை’ போன்ற படங்கள் வந்தால் மட்டுமே இந்த கொடுமைகள் உலகத்திற்கு தெரியவரும். அப்பொழுதுதான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு பெண்களுக்கு உண்மையான விடியல் பிறக்கும். இதை உரக்க சொன்ன இயக்குநர் கார்த்தி ராம் குழுவினரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.








