SpotlightUncategorizedசினிமாவிமர்சனங்கள்

இறுதி பக்கம் விமர்சனம் – 4/5

ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் சிலம்பரசன், கிருபாகர், செல்வி வெங்கடாசலம் தயாரிக்க உருவாகியிருக்கிறது “இறுதி பக்கம்”.

ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன், விக்னேஷ் சண்முகம், கிரிஜா ஹரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில நல்ல படங்களும் வருவதுண்டு. அதை தேடிபிடித்து மக்களுக்கு சரியாக கொண்டு சேர்ப்பதில் இருக்கிறது திறமை. அந்த திறமை தமிழ் வீதி’க்கு எப்போதுமே இருக்கிறது.

ஒரு நல்ல படத்திற்கு, நல்லவிதமான விமர்சனம் கொடுப்பதில் பெருமை கொள்கிறது “தமிழ் வீதி”.

கதைப்படி,

நாயகி, அம்ருதா ஸ்ரீநிவாசன் தனது வீட்டில் தனியாக இருக்கும் போது, அங்கு வரும் மர்ம நபர் ஒருவர், அம்ருதாவை கொலை செய்து விடுகிறார்.

இந்த வழக்கு அந்த ஏரியா இன்ஸ்பெக்டராக வரும் ராஜேஷ் பாலசந்திரனுக்கு வருகிறது. வழக்கை எடுத்து விசாரிக்க, வழக்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

ஒருவழியாக கொலை செய்த நபரை கைது செய்கின்றனர் போலீஸார். வழக்கு முடிந்துவிட்டது என்று பார்த்தால், கொலை செய்ய சொல்லியது வேறு ஒரு நபர் என்று அடுத்த அடி எடுத்து வைக்கிறது இந்த வழக்கு.

இறுதியாக யார் இந்த கொலையை செய்ய சொன்னது என்பதே படத்தின் க்ளைமாக்ஸாக இருக்கிறது.

கதையில் நடித்த நாயகி அம்ருதா, அம்சமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இயல் என்ற எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்த அம்ருதா, அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

அளவான சிரிப்பு, அளவான மகிழ்ச்சி, அளவான ஏக்கம், அளவான காதல், அளவான அழகு என அனைத்தையும் அளவாக கொடுத்து கதாபாத்திரத்தை அழகூற கொடுத்திருக்கிறார் அம்ருதா.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் ராஜேஷ், கதைக்கேற்ற பொருத்தம் தான்.           வழக்கை விசாரிக்க சுழன்று சுழன்று ஓடும் கதாபாத்திரமாக கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ராஜேஷ்.

காதலனாக வரும் விக்னேஷ் சண்முகம் மிகச் சரியான பொருத்தம். காதலை வெளிப்படுத்தும் காட்சியாக இருக்கட்டும், காதலியை கைபிடிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், காதலியை விட்டு விலகும் காட்சியாக இருக்கட்டும் அனைத்திலும் மிகவும் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் விக்னேஷ்.

படத்தின் ஒட்டுமொத்த திறமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் மனோ வெ கண்ணதாசன். அருமையான கதை நகர்வு, அருமையான திரைக்கதை, அருமையான காட்சியமைப்பு என அனைத்தையும் கவனமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

எடுத்துக் கொண்ட மையக்கருவை மிக தெளிவாக கூறிவிட்டு சென்றிருக்கிறார் இயக்குனர். க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சி யாரும் எதிர்பார்க்காத ஒன்று,

தமிழ் சினிமா தூக்கிவைத்து கொண்டாடிய துருவங்கள் 16, ஜீவி உள்ளிட்ட சில படங்களின் வரிசையில் “இறுதி பக்கம்” திரைப்படம் இணைகிறது.

தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு தரமான இயக்குனர் கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

பிரவின் பாலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே நம்மை அறியாமல் நம் கண்ணை காட்சிக்குள் இழுத்துச் சென்ற பெருமை ஒளிப்பதிவாளருக்கே சேரும்., நாயகி கல்லூரி படிக்கும் போது ஒரு வகையான ஒளிப்பதிவையும், காதலிக்கும் போது ஒரு வகையான ஒளிப்பதிவையும் கொடுத்து காலத்தை ஒளிப்பதிவிலேயே காட்டிவிட்டு செல்கிறார் பிரவின்…

இயக்குனர் எடுத்து வந்த படத்தை இவ்வளவு நேர்த்தியாக நம்மை குழப்பாத வண்ணம் மிக அருமையாக எடிட்டிங்க் செய்து முழுமையான படத்தை கொடுத்த படத்தொகுப்பாளர் ராம் பாண்டியனுக்கு வாழ்த்துகள்.

ஜோன்ஸ் ரூபர்ட் அவர்களின் இசையும் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

அறிமுக நாயகர்களை வைத்து தரமான படத்தை சினிமா ரசிகர்களுக்கு படைத்திருக்கிறார் இயக்குனர். இப்படியான சினிமா வந்து கொண்டிருக்கும் வரையில் தமிழ் சினிமா அசைக்க முடியா ஒரு அண்டமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை…

இறுதி பக்கம் – தமிழ் சினிமாவில் தனி ஒளி…..

Facebook Comments

Related Articles

Back to top button