யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரதா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இறுகப்பற்று.
வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
படத்தில் மூன்று விதமான தம்பதிகள் வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், உரசல்கள், மோதல்கள், காதல் இவற்றை மையப்படுத்தி உருவாகியிருப்பது தான் இந்த “இறுகப்பற்று” படத்தின் கதை.
விக்ரம் பிரபு – ஷ்ரதா ஸ்ரீநாத் திருமணமான ஒரு வருட தம்பதிகள். இருவரும் தங்களுக்கான வாழ்க்கையை மிக அழகாக வாழ்ந்து வருகின்றனர். ஷ்ரதா ஸ்ரீநாத், விவாகரத்து கேட்டு வரும் ஜோடிகளுக்கு கவுன்சிலிங்க் கொடுக்கும் வேலை செய்து வருகிறார். தினசரி பத்து தம்பதிகளுக்காவது கவுன்சிலிங் கொடுத்து அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
விதார்த் – அபர்ணதி இவர்களுக்கு திருமணமாகி 6 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கும் தம்பதியினர். விதார்த், தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஜிம் சென்று உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்பவர் விதார்த். அபர்ணதி, தனக்கு பிடித்தமானதை உண்டு, உடல் பருமனாக இருக்கிறார். உடல் பருமனாக இருப்பதை சுட்டிக் காட்டி அடிக்கடி வீட்டில் சண்டை இழுக்கிறார் விதார்த்.
இதனால் இவர்களுக்குள் இல்லற வாழ்க்கை தடைபடுகிறது. விவாகரத்து வரை செல்கிறார் விதார்த். இதனால் செய்வதறியாது ஷ்ரதாவிடம் கவுன்சிலிங் செல்கிறார் அபர்ணதி.
ஸ்ரீ – சானியா தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணமான புதிதில் அழகாக செல்லும் இந்த திருமண வாழ்க்கை போக போக பிடித்தம் இல்லாமல் இருவருக்குள்ளும் சண்டை, சச்சரவு, மோதல் என செல்கிறது.
இந்த இரு தம்பதியினரும் தங்களின் இன்னலுக்காக ஷ்ரதாவிடம் கவுன்சிலிங்க் செல்கின்றனர். இரு தம்பதியினருக்கும் தன்னால் முடிந்த கவுன்சிலிங்கை கொடுக்கிறார் ஷ்ரதா.
இந்த இரு தம்பதியினரும் வாழ்க்கையில் மீண்டும் ஒன்றிணைந்தார்களா.? நன்றாக சென்று கொண்டிருந்த விக்ரம் பிரபு – ஷ்ரதா வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
நடிகர் விக்ரம் பிரபு, தனது கேரக்டரை மிக அழகாக செய்திருக்கிறார். தனக்கான காதல் எப்படி வேண்டும், தனக்கான அன்பு எப்படி வேண்டும் என்று கூறும் இடத்தில் கண் கலங்க வைக்கும் நடிப்பை கொடுத்து அசத்தியிருந்தார் விக்ரம் பிரபு. வாழ்க்கையின் உண்மையான ஓட்டத்தை பல வசனங்கள் மூலம் யதார்த்தத்தை எளிதில் புரிய வைத்த ஷ்ரதாவின் நடிப்பு பாராட்டுதலுக்குறியது.
உடலை ஏற்றி இறக்கி தனது கதாபாத்திரத்திற்காக உடலளவிலும் தனது முழு உழைப்பைக் கொடுத்திருக்கிறார் அபர்ணதி. நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். தன்னோட வாழ்க்கையை தன்னால் வாழ முடியவில்லை என்று பல பக்க வசனங்களை ஒரே காட்சியில் கூறும் போது கண்களில் தன்னையும் மீறி கண்ணீர் எட்டிப் பார்த்து விடுகிறது. தனது கண் அசைவிலும், உடல் மொழியிலும் தனது நடிப்பை உணர்ச்சிகரமாக கொடுத்து கலங்கடித்திருக்கிறார் விதார்த்.
ஸ்ரீ – சானியா இருவரும் சின்ன சின்ன விஷயத்தில் தங்கள் மோதலை பெரிதாக்கிக் கொண்டே போவதும், ஸ்ரீ சானியாவை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் தன்னைத் தானே பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு மற்றவர்களை முட்டாளாக நினைத்து வாழ்ந்ததை ஒரு கட்டத்தில் ஸ்ரீ உணரும் போது, பலரும் தன்னை அறியாமலேயே இந்த தவறை செய்து வருவதை வாழ்க்கையின் உண்மையை காட்சியாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.
மனோபாலாவும் – ஸ்ரீயும் பாத்ரூமில் உரையாடும் காட்சி, கலகலப்பை கொடுத்தாலும், பலரையும் யோசிக்க வைக்காமல் இல்லை.
தம்பதியினருக்குள் இருக்கும் சின்ன சின்ன மோதல்கல், உரசல்கள், புரிதலின்மை இவற்றையெல்லாம் அவ்வப்போது பேசி உணர்வுகளை வெளிப்படுத்தினாலே பல குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் என்பதை இயக்குனர் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கோபத்தைத் தாண்டி அது வெறுப்பாக மாறும் இடத்தில் தான் பலருக்கும் புரிதலின்மை இல்லாமல் பல பிரிவுகள் இங்கு இருக்கின்றன. பிரச்சனைகள் சிறியதாக இருக்கும் போதே அதை ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொண்டாலே இங்கு பலரின் இல்லற வாழ்க்கை இன்பமானதாகவே இருக்கும் என்பதை கூறியிருக்கிறார் இயக்குனர்.
ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன.உணர்வுகளை வெளிப்படுத்தும் இடத்தில் பின்னணி இசை பல இடங்களில் பேசியிருக்கிறது.
கோகுல் பினாயின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்டியிருக்கிறது. முதல் பாதி சற்று ஸ்லோவாக செல்வதை கவனித்திருந்திருக்கலாம். இருந்தாலும் இரண்டாம் பாதி டாப் கியர் போட்டுச் செல்வதை பாராட்டியே ஆக வேண்டும்.
இறுகப்பற்று – இணையட்டும் இதயங்கள்…