
பழம் பெரும் இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபஸ்டின், யோகிபாபு, அபிராமி, ரோபோ சங்கர், புஜிதா, ஒய் ஜி மகேந்திரன், மதுசூதனன் ராவ், ஜான் விஜய், நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஜாலியோ ஜிம்கானா.
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.
டிரான்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
பல வருடங்களுக்கு முன் ஹிட் கொடுத்த இயக்குனர் சக்தி சிதம்பரம், தொடர்ச்சியாக சில படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. இப்படமாவது இயக்குனருக்கு கைகொடுத்திருக்கிறதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
அரசியல்வாதியாக வரும் மதுசூதனின் தில்லு முல்லுகளை வெளிச்சத்திற்கு எடுத்து வருகிறார் வக்கீலாக இருக்கும் பிரபுதேவா. இதனால் இருவருக்குள்ளும் பகை இருக்கிறது.
அபிராமிக்கு மடோனா உட்பட மூவர் மகள்களாக இருக்கின்றனர். தனது தாத்தாவின் மருத்துவ செலவுக்காக வட்டிக்கு ஒருவரிடம் பணம் கேட்க, மடோனாவின் அக்கெளண்டில் 25 லட்சம் ரூபாய் வந்து விழுகிறது.
பணத்தினை எடுத்து மருத்துவ செலவு செய்கிறார் மடோனா. அதன்பிறகு தான் தெரிகிறது 25 லட்சம் ரூபாய் தவறுதலாக மதுசூதனின் ஆட்களிடம் இருந்து வந்தது என்று.
என்ன செய்வதென்று தெரியாமல், வக்கீலாக இருக்கும் பிரபுதேவாவிடம் ஐடியா கேட்க செல்கின்றனர் அபிராமியும் அவரது மகள்களும்.
அங்கு சென்ற பின்பு தான் தெரிகிறது. பிரபுதேவா ஏற்கனவே இறந்திருக்கிறார் என்று..
இதனால் என்ன செய்வதென்று திகைத்து நிற்கின்றனர். இந்நிலையில், மதுசூதனன் டீம் பிரபுதேவாவை கொல்வதற்காக துரத்துகிறது, அவர் இறந்துவிட்டார் என்று தெரியாமல்.
அவர் பிணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல், எடுத்துக் கொண்டு சுற்றுகின்றனர் அபிராமி டீம்.
பிரபுதேவாவின் பிணத்தை வைத்து மிகப்பெரும் திட்டம் தீட்டுகிறார் மடோனா.. பிரபுதேவாவை கொன்றால் மட்டுமே தனக்கு மினிஸ்டர் பதவி கிடைக்கும் என்பதால் பிரபுதேவாவை தேடி அலைகிறார் மதுசூதனன்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக பிரபுதேவா வழக்கமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படத்தில் இறந்தவர் போல் நடித்து நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனாலும், ஆங்காங்கே எட்டிப் பார்த்த சற்று ஓவர் ஆக்டிங்கை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
100 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 1000 ரூபாய்க்கு நடித்து வைத்தது போன்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அபிராமி. கதையோடு ஒன்றிய கதாபாத்திரம் போல் தெரியவில்லை.
மடோனாவின் இயல்பான நடிப்பு படம் முழுவதும் இருந்தாலும், ஹன்சிகாவிற்கு டப்பிங் கொடுப்பவர் மடோனாவிற்கு டப்பிங் கொடுத்திருப்பதால், ஒரு சில காட்சிகளில் ஹன்சிகா தான் ந்டித்திருக்கிறார் என்று புலம்ப வைத்திருக்கிறார்கள்.
ரோபோ சங்கர், கல்லூரி வினோத், ரெடின் கிங்க்ஸ்லி, யோகி பாபு என பலர் இருந்தும் காமெடிக்கு பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கிறது படத்தில். அவுட் டேட் காமெடிகள் படத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது.
எந்த இடத்திலும் லாஜிக் பார்க்காமல் சிரிப்பதற்கென்று திரையரங்கிற்குள் சென்று சிரிக்க வேண்டும் என்றெண்ணினால் ஜாலியோ ஜிம்கானா நல்லதொரு எண்டர்டெயின்மெண்ட் படம் தான்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு நன்றாக கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவு கலர்ஃபுல் தான்.
ஜாலியோ ஜிம்கானா – லாஜிக் இல்லை ஆனால் மேஜிக் நிகழ்த்தியிருக்கிறது.