Spotlightவிமர்சனங்கள்

டூரிஸ்ட் ஃபேமிலி – விமர்சனம் 4/5

றிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், யோகிபாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்‌ஷ்மி, மாஸ்டர் கமலேஷ் ஜெகன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “டூரிஸ்ட் ஃபேமிலி”.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஷான் ரோல்டன். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அரவிந்த் விஸ்வநாதன்.

படத்தொகுப்பு செய்திருக்கிறார் பரத் விக்ரமன். ராஜ்கமல் கலை இயக்குனராக இருந்திருக்கிறார்.

பசிலியன் நசரத், முகேஷ் ராஜ், யுவராஜ் கணேசன் உள்ளிட்டவர்கள் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

கதைக்குள் சென்று விடலாம்…

விலைவாசி ஏற்றத்தால் இலங்கையில் வாழ முடியாமல் ஒரு குடும்பம் தமிழகத்திற்குள் ராமேஸ்வரம் வழியாக அண்டை புகுகிறது. அந்த குடும்பத்தின் தலைவனாக சசிகுமார் தலைவியாக சிம்ரன். இவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் மிதுன் ஜெய் சங்கர் மற்றொருவர் மாஸ்டர் கமலேஷ் ஜெகன்.

இவர்களுக்கு சிம்ரனின் சகோதரனான வரும் யோகிபாபு அடைக்கலம் கொடுக்கிறார். சென்னைக்கு வரவழைத்து, ஒரு காலனியில் வீட்டை வாடைக்கு எடுத்துக் கொடுத்து அவர்களை தங்க வைக்கிறார் யோகிபாபு.

மேலும், கேரளாவில் இருந்து வந்ததாக அப்பகுதியில் இருக்கும் மனிதர்களிடம் கூறிக் கொள்ளும்படியும் கூறிவிட்டுச் சென்று விடுகிறார்.

அப்பகுதியில் இருக்கும் மனிதர்களிடையே மிகவும் அன்பாக பழகி வருகின்றனர் சசிகுமாரும் சிம்ரனும்.

இவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த சமயத்தில், ராமேஸ்வரத்தில் குண்டு ஒன்று வெடிக்கிறது. அங்கு குண்டு வைத்தது இலங்கையில் இருந்து வந்த சசிகுமாரின் குடும்பம் தான் என்று சந்தேகித்து சசிகுமார் & பேமிலியை தேட ஆரம்பிக்கிறது போலீஸ்.

இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

விமர்சனம்:

சசிகுமாருக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு பெயர் இருக்கிறது. இப்படியான கதையில் தான் நடிப்பார், அப்படியான கதையில் நடிக்கமாட்டாரென்று.

இப்படியான கதை கொண்ட இப்படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் சசிகுமார். அயோத்தி படம் மாதிரியான ஒரு மாசற்ற தூய அன்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக தர்மதாஸ் என்ற பெயர் கொண்டு இப்படத்தில் நடித்து நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். இந்த மனுசன் கோபத்தையும் இப்படி அன்பாக வெளிப்படுத்துகிறாரே என்று கூறும் அளவிற்கு ஒரு சுத்தமான அக்மார்க் முத்திரைக் கொண்ட நபராக இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார் சசிகுமார்.

மனைவிக்கு நல்லதொரு கணவனாக, மகன்களுக்கு நல்லதொரு அப்பாவாக, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு மனிதனாக என தன் கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்தையும் இப்படத்தில் கொடுத்திருக்கிறார் சசிகுமார்.

வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரனும் தனது கேரக்டருக்கு எந்த வித குறையும் வைக்காமல் மிகவும் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். சசிகுமாருக்கு ஜோடியாக மிகவும் பொருத்தமாக பொருந்தியிருக்கிறார். அதிலும், ஆள் தோட்ட பூபதி பாடலுக்கு போடும் ஆட்டம் சூப்பர்..

மகனாக நடித்த ஆவேஷம் பட புகழ் மிதுன் ஜெய் சங்கர் தனது ரோலில் பொருத்தமாக பொருந்தியிருக்கிறார். அப்பா – மகன் இருவருக்குமிடையே நடக்கும் பாச உரையாடல் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விடுகிறது.

இரண்டாவது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் இப்படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். அப்படியொரு நடிப்பை அவரிடம் இருந்து வாங்கியிருக்கிறார் இயக்குனர். ஆங்காங்கே, இவரை வைத்து நகர்த்திய காமெடி காட்சிகள் திரையில் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

இளங்கோ குமரவேல் மற்றும் ஸ்ரீஜா ரவி இருவருக்குமிடையே இருக்கும் காதல் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது.

தாயை இழந்து தனிமையில் வாடும் ஒரு இளைஞனாக வாழ்ந்திருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். தாயிற்கு நினைவிழந்ததைக் கண்டு அழும் போது நம்மையும் சேர்த்து அழ வைத்துவிடுகிறார் அபிஷன்.

காமெடிக்கு யோகிபாபுவை மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அன்பான ஒரு கதாபாத்திரமாக ரமேஷ் திலக், கண்டிப்புடன் கூடிய அன்பு கொண்டவராக எம் எஸ் பாஸ்கர், போலீஸாக பக்ஸ், அவரது மனைவியாக நடித்தவர் இவர்களது மகளாக வரும் யோகலெக்‌ஷ்மி என அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியான பொருத்தமாக பொருந்தியிருக்கிறார்கள்.

சீரியஸாக சென்று கொண்டிருக்கும் கதையில் காமெடியை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். காமெடி, அன்பு, மனிதம் என மூன்றையும் கையில் எடுத்து அதை மிகவும் சரியான கோணத்தில் ஒரு கதை அமைத்து மிகச்சரியான முறையில் ஒரு திரைக்கதை அமைத்து தரமான படைப்பாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

தமிழ் சினிமாவில் மிகவும் அரிதான படைப்பாக வரும் இம்மாதிரியான படைப்பை திரையரங்குகளில் நிச்சயம் குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டும்.

குத்து பாடலோ, அடிதடியோ, வெட்டுக் குத்தோ, இரத்தம் தெறிக்கும் காட்சிகளோ, முத்தக் காட்சிகளோ, ஆபாச காட்சிகளோ, ஆபாச வார்த்தைகளோ, மது மற்றும் புகை கொண்ட காட்சிகளோ என எதுவுமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான ஒரு தரமான படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

எந்த இடத்தில் இசை வேண்டுமோ அதைக் கொடுத்து எந்த இடத்தில் அமைதி வேண்டுமோ அதையும் கொடுத்து தரமான ஒரு இசையமைப்பாளராக தெரிந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். படம் பார்க்கும் நம்மை கதையோடு சேர்ந்து பயணிக்க வைக்கும் அளவிற்கான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். மம்பட்டியான் பாடல் ஹைலைட்…

அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு, கதைக்கு தேவையான வெளிச்சத்தை நன்றாகவே கொடுத்திருக்கிறது. குறைந்த செலவில் மிகவும் தரமான ஒரு படத்தை தயாரித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். பிரமாண்ட படைப்பையும் தாண்டி கதையும் கதைக்களமும் கொண்ட படங்கள் பேசப்படும் என்பதற்கு இப்படம் ஒரு நல்லதொரு சான்று தான்.

கதைக்கு தேவையானதை மட்டும் படத்தில் வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன்.

அயோத்தி, குடும்பஸ்தன், லப்பர் பந்து உள்ளிட்ட ஹிட் படங்கள் இயக்குனர்களின் வரிசையில் இப்படத்தின் மூலம் அதில் இணைகிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.

எந்தவொரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இப்படியொரு தரமான படைப்பைக் கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

டூரிஸ்ட் ஃபேமிலி – மனிதம் பேசுகிறது…

Facebook Comments

Related Articles

Back to top button