Spotlightசினிமாவிமர்சனங்கள்

Jothi Movie Review 3.75/5

கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் வெற்றி, ஷீலா, கிரீஷா க்ரூப் மற்றும் ராஜா சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஜோதி. SPR ஸ்டூடியோஸ் சார்பில் ராஜா சேதுபதி இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

ட்ரெய்லர் பெரிதாக பலரின் மனதையும் வருடிய ஜோதி திரைப்படம் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

கதைப்படி,

ராட்சசன் பட புகழ் சரவணன் டாக்டராக வருகிறார். இவரது மனைவி தான் ஷீலா. நிறைமாத கர்ப்பிணி. இன்னும் 4 நாட்களில் குழந்தை பிறக்கும் தருவாயில், அன்று இரவு சரவணனுக்கு அவசர அழைப்பு வர, வெளியே சென்று விடுகிறார்.

இந்த சூழ்நிலையில், வீட்டிற்குள் புகுந்துவிடும் மர்ம நபர் ஒருவர், ஷீலாவின் வயிற்றை கிழித்து குழந்தையை கடத்திச் சென்று விடுகிறார். மயக்கமுற்ற நிலையில் கிடக்கும் ஷீலாவை ஓடோடி வந்து பார்த்து கதறி அழுகிறார் எதிர்வீட்டில் குடியிருக்கும் கிரீஷா.

உடனே, அந்த ஏரியாவின் சப் இன்ஸ்பெக்டரும் தனது கணவருமான வெற்றிக்கு போன் செய்து உடனே அவரை வரவழைக்க்கிறார். வெற்றி, ஷீலாவை உடனே மருத்துவமனையில் சேர்க்கிறார்.

குழந்தையை கடத்திய அந்த மர்ம நபர் யார் என்று தீவிர விசாரணையில் இறங்குகிறார் நாயகன் வெற்றி. இறுதியாக குழந்தையை மீட்டனரா.? கடத்திய மர்ம நபர் யார் என்று கண்டுபிடித்தார்களா.? இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் வெற்றி, வழக்கமான நடிப்பையே கொடுத்திருந்தாலும், இன்னும் சற்று முகபாவனைகளை ஆங்காங்கே கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. வசனங்கள் உச்சரிப்பில் நன்றாகவே தேறியிருக்கிறார் வெற்றி. ஜோதியாக வாழ்ந்து அசத்தியிருக்கிறார் ஷீலா. நிறைமாத கர்ப்பிணியாக அவர் ஏற்று நடித்த இந்த கதாபாத்திரத்திற்காகவே அவரை வெகுவாகவே பாராட்டலாம்.

அந்நேரத்தில் அவர் ஆடும் பரதம் நம்மை கண்கலங்க வைக்கிறது. அழகான தேவதையாகவும் வந்து நடிப்பிலும் ஆங்காங்கே ஸ்கோர் செய்துவிட்டு செல்கிறார் கிரீஷ் க்ரூப். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ராஜா சேதுபதி. இவரே கதையின் திருப்பு முனையாகவும் இருக்கிறார். ஷீலாவின் தங்கையாக நடித்தவர், க்ளைமாக்ஸ் காட்சியில் சண்டைக் காட்சியில் அசத்திய ஹரீஷ், அவரின் தம்பி, உள்ளிட்ட அனைவரும் படத்திற்கு மிகப்பெரும் பலமாகவே நின்றிருக்கின்றனர்.

படத்தில் ஏட்டு கதாபாத்திரத்தில் நடித்த குமரவேலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதையும் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

ஷீலாவின் தந்தையாக நடித்த மைம் கோபியின் நடிப்பையும் நாம் பெரிதாக பாராட்டலாம். அப்பா – மகளுக்கான பாசத்தை முதல் பாடலிலே காட்டி நம்மை கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கின்றனர்.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அதிகமாக நடைபெறும் குழந்தை கடத்தலை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இந்தியா முழுவதும் வருடத்திற்கு சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும், அதில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் கண்டுபிடிக்க முடியாமல் போவதாகவும் அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று உள்ளது. பிறந்த குழந்தை காணாமல் போனால், அந்த தாய் படும் வேதனையை இப்படத்தில் காண்பிருத்திருக்கிறார்கள்.

காட்சிக்கு காட்சி பரபரப்பை ஏற்றியிருக்கிறார் இயக்குனர். யார் குழந்தையை கடத்தியிருப்பார் என்று படம் பார்ப்பவர்களை எந்த இடத்திலும் கண்டுபிடித்துவிடாதபடி, மிகவும் தெளிவாக திரைக்கதை அமைத்து கதையை நகர்த்திருக்கிறார் இயக்குனர்.

ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. சேஷையாவின் ஒளிப்பதிவு அப்ளாஷ்.

படத் தொகுப்பு – சத்யமூர்த்தி, பாடல்கள் – கார்த்திக் நேத்தா, நடன இயக்கம் – சுவி குமார், சண்டை பயிற்சி இயக்கம் – ஆர்.சக்தி சரவணன், ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார், கிராபிக்ஸ் – Getin dreams studio, DI Colorist – sriram, அனைவரும் தங்களுக்கான பணிகளை சிறப்பாக செய்திருந்ததால் ஒரு வலி நிறைந்த காவியத்தை படைத்திருக்க முடிந்தது.

முதல் பாதியில் சற்று வேகம் ஏற்றியிருந்தால் சீட்டின் நுனியில் அமர வைத்திருந்திருக்கலாம். இருந்தாலும் குழந்தை கடத்தலைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ப(பா)டமாக இருப்பதால் “ஜோதி”யை பெரிதாகவே நாம் கொண்டாடலாம்.

வரும் ஜூலை 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

ஜோதி – பிரகாசமான ஜோதியாக ஜொலித்திருக்கிறாள்… 

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close