Spotlightவிமர்சனங்கள்

க/பெ ரணசிங்கம் – விமர்சனம் 3.5/5

ராமநாதபுரம் மாவட்டம் என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது தண்ணீர் பஞ்சம் மட்டுமே…. காலம் பல கடந்தாலும் அங்கு நடக்கும் தண்ணீர் தட்டுப்பாடு பஞ்சம் மட்டும் ஒரு காலமும் மாறாது. குடிக்கும் குடிநீருக்காக இன்னமும் பல கிலோமீட்டர் அலைந்து செல்லும் மக்கள் அங்கு இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படியான, இராமநாதபுரம் மாவட்டத்தை கதைகளமாக கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் விருமாண்டி. அங்கு சுற்றி இருக்கும் ஊரின் நலனுக்காக குடிநீர் பிரச்சனைக்காகவும் மக்களை திரட்டி போராட்டம் செய்யக்கூடிய போராளியாகவும் நல்லதொரு மனிதனாகவும் வருகிறார் ரணசிங்கம் (விஜய்சேதுபதி).

மண்ணின் பெருமையையும், அதன் மகத்துவத்தையும் அவ்வப்போது மக்களிடத்தே கூறிக் கொண்டு வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அரியநாச்சி (ஐஸ்வர்யா ராஜேஷ்)யை காதல் கொள்கிறார். அவரையே திருமணம் செய்து கொள்கிறார்.

அம்மா, அப்பா, மனைவி, தங்கையின் நலனுக்காகவும், பொருளாதார நிலை கருதியும் துபாய் சென்று பணிபுரிய செல்கிறார் விஜய் சேதுபதி. அங்கு அவருக்கு பெரியதாக ஒரு பிரச்சனை வர, தன் கணவரை காண வேண்டும் என்று இங்கிருந்து அரசிடமும் அரசாங்க அதிகாரர்களிடமும் தனது போராட்டத்தை தொடர்கிறார் அரியநாச்சி..

அந்த போராட்டத்தில் அரியநாச்சி வென்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் முதல் பாதியில் மட்டுமே விஜய் சேதுபதி  தோன்றினாலும், தனக்கான கேரக்டரை மிகவும் வலுவாக பதிவு செய்துவிட்டார் விஜய் சேதுபதி. களம் இறங்கி மக்களுக்காக போராடும் போராளியாக இருக்கட்டும், தனது மனைவி மீது காதல் புரிவதிலும் , தன் குடும்பத்தின் மீது அன்பு செலுத்துவதிலும் என ரணசிங்கம் கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த கதையை தனது தோளில் சுமந்து செல்கிறார் அரியநாச்சி (ஐஸ்வர்யா ராஜேஷ்). தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கண்களின் ஈரத்தை எட்டி பார்க்க வைத்து விடுகிறார். காக்கா முட்டை, கனா படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தனி முத்திரை பதிக்கும் படமாக இப்படம் நிச்சயம் அமையும். தனது கணவனுக்காக அரசு அதிகாரிகளிடமும் ஆட்சியில் இருப்பவர்களிடமும் போராடும் பெண்ணாக வலுவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் பெரும் பாராட்டைப் பெறுகிறார் அரியநாச்சி.

மாவட்ட கலெக்டராக ரங்கராஜ் பாண்டே, மிகவும் எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார். விஜய்சேதுபதியின் தங்கையாக வரும் பவானிஸ்ரீ, மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார். கதையோடு ஒன்றி பயணம் செய்திருக்கிறார்.

முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜா, வேல ராமமூர்த்தி, பூ ராமு, சுப்ரமணிய சிவா என கதாபாத்திரம் அனைத்தும் நேர்த்தியான தேர்வு.

பின்னனி இசை பாடல்கள் அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். கதையோடு சேர்ந்து பயணம் செல்ல, மனதை ரணம் ஆக்க ஜிப்ரானின் இசையும் காரணம்.

ஏகாம்பரம் அவர்களின் ஒளிப்பதிவு… மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு அருமையான ஒளிப்பதிவு. ராமநாதபுரத்தை கண்களில் அப்படியே காட்சிப்படுத்தி நிலை நிறுத்தியிருக்கிறார். அவருக்கு பாராட்டுகள்.

படத்தின் நீளத்தை எடிட்டர் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

தண்ணீர் பஞ்சம், பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் இளைஞர்கள், கருவேல மரம், அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கு, விவசாயிகளின் தற்போதைய நிலை,  கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம், தமிழர்களின் வேலையிழப்பு என அனைத்தையும் ஒரே படத்தில் கூறி சாட்டையடி அடித்திருக்கிறார் இயக்குனர் விருமாண்டி.

வீர பெண்மனியின் போராட்டம்….

க/பெ  ரணசிங்கம் – ரணமானது மனது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close