இயக்குனர்: கிருத்திகா உதயநிதி
நடிகர்கள்: விஜய் ஆண்டனி, சுனைனா, அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு
இசை: விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்
அமெரிக்காவில் மிகப்பெரிய மருத்துவமனையின் ஓனராக மட்டுமல்லாமல் நம்பர் ஒன் டாக்டராக வருகிறார் விஜய் ஆண்டனி. அவரது கனவில் பாம்பு ஒன்றும், காளை ஒன்றும் அடிக்கடி வருகிறது. ஒரு கட்டத்தில் தான் ஒரு வளர்ப்பு மகன் என தெரிய வர, தன் தாய் யார் என்பதை கண்டுபிடிக்கவும், கனவில் வருவதை பற்றி அறிந்து கொள்ளவும் இந்தியா வருகிறார் விஜய் ஆண்டனி.
இந்தியா வந்ததும் தன் தாய் இறந்து விட்டதாக அறிகிறார். ஆனால், தந்தை உயிருடன் இருப்பதை அறிந்த விஜய் ஆண்டனி, அவரை தேடி அலைகிறார். தனது தந்தை யார் என்பதை கண்டுபிடிக்கும் அந்த ஒரு தேடுதல் வேட்டைதான் இந்த காளியின் வேட்டை…
தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இயல்பான, அமைதியான, ஆக்ரோஷமான, கலாட்டாவான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி. நான்கு கதாநாயகிகள் படத்தில் எட்டிப்பார்த்தாலும், யாரும் மனதில் நின்று போகவில்லை.
படத்தில் மூன்று பாகமாக கதை வெளிவருகிறது. மூன்று பாகத்தில் ஒரு கதை மட்டுமே படத்தின் கதையோடு சம்மந்தப்பட்டு வருவதால் அதை மட்டுமே ரசிக்க முடிகிறது.
படத்தில் யோகி பாபு இல்லை என்றால் முதல் பாதியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவரது காமெடி கைகொடுத்து படத்தை நகர வைக்கிறது.
இசையில் அரும்பே பாடல் ரிப்பீட் மோட், பின்னனி இசை ரகம்.
இரண்டு பெரிய சண்டைக்காட்சிகள் அதிர வைக்கிறது. ரிச்சர்ட் ஒளிப்பதிவு கலர்புல்.
’காளி’ – மிரட்டலான காதல் ’காளி’