அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘காப்பான்’ படத்திற்காக மீண்டும் இணைந்தது இந்த கே வி ஆனந்த் – சூர்யா கூட்டணி.
இந்திய பிரதம மந்திரி(மோகன்லால்)யின் சிறப்பு காவலாளியாக (SPG) கதிரவன் (சூர்யா) பணிபுரிகிறார். அதே சமயம் தமிழகத்தில் இருக்கும் தனது கிராமத்தில் இயற்கை விவசாயமும் செய்து வருகிறார்.
பிரதம மந்திரியை சுட்டு வீழ்த்த ஒரு கும்பல் சுற்றிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் சூர்யாவின் பாதுகாப்பையும் மீறி பிரதம மந்திரியை அந்த கும்பல் கொன்று விடுகிறது.
மோகன்லாலின் மகனாக வரும் ஆர்யா, பிரதமராகிறார். ஆர்யாவையும் கொல்லத் துடிக்கும் அந்த கும்பலை சூர்யா அழித்தாரா இல்லையா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
அதே சமயம், தமிழகத்தில் இருக்கும் டெல்டா மாவட்டத்தில் இருந்து பல கனிம வளங்களை தோண்டி எடுக்க முயலும் ஒரு கார்ப்பரேட் நிறுவன முதலாளிக்கு சூர்யா எப்படி பதிலடி கொடுத்தார் என்பதும் படத்தின் மீதிக் கதைதான்.
படத்தின் நாயகன், மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியை காட்டுகிறார். முதல் பாதியில் கதையின் வேகத்தோடு இவரது வேகமும் சேர படம் ஸ்பீடு தான். சூர்யாவின் கடின உழைப்பு, மெனக்கெடல், முயற்சி என அனைத்திற்கும் சல்யூட்.
சாயிஷா, ஆர்யா, சமுத்திரக்கனி கதைக்கேற்ற கதாபாத்திரம் தான். பிரதம மந்திரியாக வரும் மோகன்லால் நடிப்பில் உச்சம் தொடுகிறார்.
இயற்கை விவசாயம், Bio war, காவல் அதிகாரிகளின் (SPG) தியாகம், என சில முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்துள்ள இயக்குனர் கே வி ஆனந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஆனாலும், கதையை ஆங்காங்கே தொட்டு தொட்டுச் சென்றதால், கதையோடு பிணைத்து நம்மால் பயணிக்க முடியாமல் போனது படத்திற்கு கிடைத்த சின்ன சறுக்கல்.
படத்தின் நீளத்தை வெகுவாக குறைத்து இன்னும் ஷார்ப்பாக கொடுத்திருந்தால், சீட்டின் நுனிக்கு நம்மை கொண்டு வந்திருப்பான் இந்த ‘காப்பான்’.
ஹரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஒன்றும் பெரிதாக எடுபடவில்லை. பின்னனி இசையும் மிரட்டவில்லை.
எம் எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு மட்டுமே மனதிற்கு ஆறுதல். பூச்சிகள் வயல்வெளிகளை நாசம் செய்யும் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக காட்டியுள்ளார்கள்.
நண்பன் ஒருவன் போன் செய்து ‘என்ன மச்சான் படம் எப்படி இருக்குன்னு கேட்டா’
நம்மிடம் வரும் பதில் ‘ ஒருமுறை பார்க்கலாம் டா’
காப்பான் – விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஆங்காங்கே காப்பாற்றிய காப்பான்…