சென்னை: காவேரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார் கலைஞர் கருணாநிதி. இவரை விசாரிக்க தொடர்ந்து தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனைக்கு வெளியே திரண்டு ”எழுந்து வா தலைவா” என்று குரல் எழுப்பியபடி கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர்.
காவேரி மருத்துவமனை உள்ள பகுதியே பெரும் சோகமாக காணப்படுகிறது. இரவிலும் கால் கடுக்க தொண்டர்கள் காத்துள்ளனர். ஒவ்வொருவரும் திமுக தலைவர் கருணாநிதி வந்து விடுவார் என்ற பெரும் நம்பிக்கையை சுமந்தபடி காத்திருக்கின்றனர். மறுபக்கம் தலைவர்களும் திரண்டு வந்தவண்ணம் உள்ளனர்.
தேமுதிக இளைஞர் அணி தலைவர் சுதீஷ், பாஜக தலைவர் தமிழிசை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளனர்.
மத்திய அமைச்சர் நிதின் கத்காரியும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும், திமுக எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.